சதையை உண்ணும் பாக்ரீரியா: கம்போடியப் பெண் விநோத நோயால் பாதிப்பு

கம்போடியாவைச் சேர்ந்த 18 வயதான சுத் ரெட் எனும் பெண் தனது உடைந்த பல்லை நீக்குவதற்காக பல் மருத்துவரை அணுகி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதமளவில் சுத் ரெட்டின் முகத்தில் சில அறிகுறிகள் தென்பட்டதுடன், அவரது தொண்டையில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலந்து, முகம் முழுவதிலும் தாக்குதலை ஆரம்பித்தது. இதனால், அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கியது.

முகத்தில் இருந்த சதைகளை பாக்டீரியா கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கியது. இந்த வகை பாக்டீரியா ஒரு சிறுவெட்டுக்காயம் இருந்தாலும் கூட உடனடியாக பரவுக்கூடியது என கூறப்படுகிறது. இந்த நோயின் தாக்கத்தால் அவரால் சரிவர சாப்பிட முடியவில்லை என்றும் தற்போது முற்றிலும் எடை குறைந்து மிகவும் பரிதாப நிலையில் உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத் ரெட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு 40 வருடம் அனுபவம் உள்ள ஜெர்மன் மருத்துவர்கள் உள்ளார்கள் என்றும் ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு போதிய அளவு பணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சுத் ரெட்டிற்கு ஏற்பட்ட இந்த பாக்டீரியாத் தொற்றை சைனஸ் இன்பெக்‌ஷன் என்கின்றனர். இந்த அரிய வகை நோய் வந்தால் ஐந்தில் இருவர் உயிரிழந்துவிடுவர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுத்ரெட் தற்போது உயிருக்குப் போராடி வருகின்றார்.