உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வருபவர்களின் கதி இதான்.

அவைக்கென்ன வெளிநாட்டுக்காறர்.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து தந்தத பாருங்க.

நாங்கள் என்ன இதுக்கு வழி இல்லாமலா இருக்கிறம்.

வெளிநாட்டில இருந்து வந்து நிக்கினம் உணர்ந்து உதவி செய்ய வேண்டாமோ?

கேட்காமலே செய்யவேணுமெல்லா.

வெளிநாட்டிலிருந்து வந்து நிக்கினம் கோயிலுக்கு கொஞ்சம் உதவி செய்யலாம் தானே.

இதக் கொண்டு தரத்தான் அங்கயிருந்து வந்தனாக்கும்.

ஒரு சென்ட் போத்தலோட அலுவலை முடிச்சிட்டான்.

இப்படி பல வசனங்களை காதால் கேட்டு இருப்போம் அல்லது சொல்லி இருப்போம். இந்த நேரம் மாதம் மாதம் அனுப்புற காசு, கொண்டாட்டம், செத்தவீடு, கோயில் திருவிழா எண்டு அனுப்புற காசு, வெளிநாட்டிலிருந்து கோயிலுக்குச் செய்த உதவி, அடிக்கடி போட்ட பார்சல் எல்லாமே மறந்து போயிருக்கும்.

ஆனால் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு விடுமுறைக்காக வரும் அவர்களுடைய நிலையை பற்றி யாரும் யோசித்ததில்லை. எங்களைப் பொறுத்தவரை வெளிநாட்டிலிருந்து வந்தவர் எங்களுக்குத் தந்தது ஒரு வாசனை திரவியம் அல்லது நான்கைந்து கன்டோஸ் அல்லது வேறு ஏதாவது ஒரு சிறிய பொருளாகவோ இருக்கலாம். ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்தவரின் நிலையை யோசித்துப் பாருங்கள். அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரர்களின் பிள்ளைகள், சிலவேளைகளில் சகோதரர்களின் பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் கூட உள்ளடங்கும். மேலும் சகோதரர்களின் நண்பர்கள், சகோதரர்களின் பிள்ளைகளின் நண்பர்கள், தனது நண்பர்கள்,அயலவர்கள்,மனைவி அல்லது கணவனின் குடும்பம் அவரின் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரர்களின் பிள்ளைகள், சிலவேளைகளில் சகோதரர்களின் பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் கூட உள்ளடங்கும். மேலும் அவரின் சகோதரர்களின் நண்பர்கள், சகோதரர்களின் பிள்ளைகளின் நண்பர்கள், மனைவி அல்லது கணவரின் நண்பர்கள் இன்னும் எத்தனை எத்தனை. இவ்வளவு பேருக்குமான அன்பளிப்புப் பொருட்களை சுமந்து கொண்டுதான் ஒருவர் நாடு நோக்கி பயணிக்க வேண்டும். இதற்கிடையில் வெளிநாட்டில் இருக்கும் நண்பன் கேட்பான் மச்சான் எனக்கும் ஒரு சின்ன பாசல் கொண்டு போய் வீட்டில கொடுத்துவிடடாப்பா. அதையும் சேர்த்து சுமக்க வேண்டும். எவ்வளவு பொருட்களை என்றுதான் அவர்களும் நாடு நோக்கி கொண்டு வர முடியும்? அல்லது எவ்வளவு பணத்தைத்தான் அவர்களால் செலவழிக்க முடியும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறிய பொருளையாவது கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு சிலபல மாதங்களுக்கு முன்பே பட்டியல் போட்டு பொதி செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் ஏதாவது ஒரு பொருளையாவது கொண்டு வந்து கொடுக்காவிட்டால் எங்கட சனம் என்ன கதைக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

இது எல்லாத்தையும் தாண்டி

வெளிநாட்டிலிருந்து வந்தா பார்ட்டி வைக்க வேணும்.

வெளிநாட்டில் இருந்து வந்தா ரூர் கூட்டிக் கொண்டு போக வேணும்.

வெளிநாட்டில் இருந்து வந்தா கார் அல்லது ஆட்டோவில் தான் திரிய வேணும்.

அவனவன் தன் விருப்பத்துக்கு நடந்து அல்லது பஸ்ல போனா என்னடாப்பா வெளிநாட்டிலயிருந்து வந்து நடந்து திரியிறா எண்டு நக்கல் வேற.

இல்ல தெரியாமத்தான் கேக்கிறன் வெளிநாட்டிலிருந்து வந்தால் எங்களுக்கு உதவி செய்ய வேணும் அல்லது ஏதாவது கொண்டு வந்து தரவேணும் எண்டு சட்டம் அல்லது கட்டாயம் இருக்குதோ?

அனுபவப்பட்டவர்கள் பகிருங்கள்.