7 திருமணங்கள். ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணி.

7 திருமணங்கள் செய்து, ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணியை பொலிசார் தேடி வருகிறார்கள்.

தன்னை வைத்தியர் என குறிப்பிட்டு, இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து, அவர்களின் நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் செல்வது இந்த கல்யாண ராணியின் வழக்கம்.

7 திருமணங்களின் மூலம், அவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் ஏமாற்றப்பட்ட 26 வயதான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்ததன் மூலம், கல்யாண ராணி பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் உள்ள குட்டியகொல்ல என்ற தொலைதூர கிராமத்தை சேர்ந்தவர் சுசந்த பெர்னாண்டோ. வறுமை காரணமாக 6ஆம் தரத்துடன் கல்வியை இடைநிறுத்திய அவர், பின்னர் பௌத்த துறவியாவதற்காக பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டார். சுமார் 3 மாதங்களின் பின்னர், துறவு வாழ்க்கையை துறந்து, பொது வாழ்க்கையில் இணைந்து விட்டார்.

குடும்ப வறுமை காரணமாக, சுசந்த வேலை தேடி கொழும்பு செல்ல முடிவு செய்தார். தொலைதூர கிராமத்தில் வளர்ந்த சுசந்தவுக்கு கொழும்பு ஒரு விசித்திரமான உலகமாக இருந்தது. அந்த சிரமங்களை கடந்து, களனிமுல்ல பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக வேலையில் சேர்ந்தார்.

அந்த வேலையில் பணிபுரியும் போதே சாரதி அனுமதிப்பத்திரமும் பெற்று, பின்னர் கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் சாரதியாக பணிபுரிந்துள்ளார். ஆனால் பணியின் போது ஏற்பட்ட விபத்தால் அந்த வேலையை இழந்தார்.

வேலையிழந்த சுசந்த இரத்தினபுரிக்கு வந்து அங்குள்ள தேயிலை நிறுவன களத்தியத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அந்த நிறுவனத்தில் 31 வயதுடைய திமுத்து செவ்வந்தியும் பணிபுரிந்து வந்துள்ளார். செவ்வந்தி அழகான பெண். அந்த அழகில் சுசந்தவும் ஈர்ப்பாகி, அவருடன் நட்பினை வளர்த்தார்.

விரைவிலேயே அது காதலானது. செவ்வந்தியை விட சுசந்த ஐந்து வயது இளையவர். என்றாலும் அது இவர்களின் காதலை பாதிக்கவில்லை.

தான் மருத்துவராக இருந்ததாகவும், சிலரது பழிவாங்கலால் வேலையை இழந்ததாகவும், இடைப்பட்ட நாட்களில் குடும்பத்திற்காக சிறிய வேலைகளையும் செய்வதாக செவ்வந்தி தனது கதையை கூறினார்.

கடந்த வருடம் ஒக்ரோபர் 18ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பதுளை ரிதிபன பகுதியில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

தங்கள் மகன் வைத்தியரை திருமணம் செய்து கொண்டதில் சுசந்தவின் பெற்றோரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

பதுளையில் சுசந்தவின் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். சுசந்த இரத்தினபுரி தேயிலை நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லவில்லை. புதுமனைவியுடன், வீட்டில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தார்.

பணத் தேவை ஏற்பட, சுசந்த மீண்டும் பதுளை பகுதியில் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்ற ஆரம்பித்தார். செவ்வந்தி வீட்டிலிருந்தார். சிறிது நாளிலேயே சுசந்தவின் தந்தை அனுர லால் சில்வாவிற்கும், செவ்வந்திக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.

அதனால் தன் குடும்ப வாழ்வின் எதிர்காலம் பற்றி யோசித்துவிட்டு மனைவியுடன் மீண்டும் கொழும்புக்கு வந்தார் சுசந்த.

சிலநாட்களில் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுசந்த, தனது மனைவிக்கு இரத்தினபுரியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்தியர் வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனக்கும் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் சாரதி வேலை கிடைத்துள்ளதால் இருவரும் புவக்பிட்டிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில காலம் சென்றது. பதுளை குட்டியகொல்ல பகுதியிலுள்ள வீட்டிற்கு சுசந்தவும் செவந்தியும் வந்துள்ளார். சுசந்தவின் பெற்றோர் இருவரையும் அன்புடன் நடத்தினார்கள். இதற்கிடையில் செவ்வந்தியின் அண்ணன் என கூறிக்கொள்ளும் ஒருவரும் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். சுசந்தவின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த மூவரும் கொழும்புக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஒரு நாள் திடீரென்று தன் பெற்றோருக்கு போன் செய்த சுசந்த, அண்ணன் என கூறிக்கொண்டு வந்தவருடன் செவ்வந்தி ஓடிவிட்டதாகவும், அவரை தொடர்பு கொள்ள முயன்றால், கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுசந்த உடனே பதுளையிலுள்ள தனது வீட்டிற்கு வந்தார். செவ்வந்தி விடுத்த மிரட்டல் குறித்து கஹட்டருப்பை பொலிசிலும் புகார் செய்தார்.

தனது அண்ணன் என கூறி வீட்டுக்கு அழைத்து வந்த இளைஞனுடன், செவ்வந்தி திருமணத்திற்கு தயாராக இருக்கும் தகவலை சுசந்த அறிந்தார். அந்த நபர் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

மனவிரக்தி அடைந்து மீண்டும் கொழும்பு வந்த சுசந்த, ஹோமாகம பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள நிறுவனமொன்றில் சாரதியாக கடமையாற்றி வந்தார். அவர் வேலைக்கு வந்து சுமார் மூன்று மாதங்களின் பின், நிறுவனத்தின் தங்குமிடமான இரண்டாவது மாடியில் கடந்த 28ம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுதந்த திருமணமானவர் என்பதால், அவரது சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைப்பதில் ஹோமாகம பொலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுசந்தாவின் சட்டப்பூர்வ மனைவியை அழைத்து வருமாறு ஹோமாகம பொலிஸார் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர். ஆனால் அப்போது சுசந்தவின் திருமணமான மனைவி செவ்வந்தி, இன்னொரு திருமணம் செய்து தலைமறைவாகியிருந்தார்.

செவந்தியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசாரும் திணறினர். சுசந்த வீட்டிலிருந்த செவ்வந்தியின் அடையாள அட்டையின் நகல் ஒன்றில் முகவரியைக் கண்டுபிடித்து, பொல்கசோவிதவிலுள்ள வீட்டிற்கு சென்றனர்.

செவ்வந்தியின் சிறிய தாயார் அங்கு வசித்து வந்தார். செவ்வந்தி சிறிது காலத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின் வீட்டிற்கு வரவில்லை என்றும் பொலிஸாரிடம் கூறினார்.

அவரிடமிருந்து மேலும் சில அதிர்ச்சி தகவல்களையும் பொலிசார் பெற்றனர். மாத்தறையில் உள்ள தனது பாட்டி வீட்டிலிருந்து மூன்று இலட்சம் பெறுமதியான தங்கப் பதுக்கினையும் அவர் திருடிச் சென்றுள்ளார்.

செவ்வந்தியின் தந்தையைப் பற்றிய குறிப்பு கிடைக்கவில்லை. சிறுவயதிலிருந்தே பாட்டி வீட்டில் தாயுடன் வளர்ந்தவள். 3 வருடங்களின் முன் தாயார் உயிரிழந்து விட்டார்.

பாடசாலையில் படிக்கும் காலத்திலிருந்தே பல காதல் உறவுகளில் இருந்தாள். செவ்வந்திக்கு சுமார் 16 வயது இருக்கும் போது கர்ப்பமானதால், தாயும் செவ்வந்தியின் சித்தியும் சேர்ந்து அவளை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். செவ்வந்தி பண்டாரகம பகுதியைச் சேர்ந்த ஒருவரை முதன்முதலில் திருமணம் செய்து கொண்டார், அந்த திருமணத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பின்னர் இலத்திரனியல் ஊடகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். அதன் பின் அவரது திருமண வேட்டை தொடர்ந்தது, இதுவரை அவர் ஏழு பேரை பொய் கூறி திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. திருமணம் செய்து சில காலம் வாழ்ந்து விட்டு, நகை, பணத்தை திருடிக் கொண்டு தலைமறைவாகுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அவரது தற்போதைய இருப்பிடத்தை பொலிசார் தேடி வருகிறார்கள்.

பின்னர், சுசந்தவின் உடல் பதுளையிலுள்ள பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad