யாழ் வைத்தியசாலை ஒன்றில் அதிகாரிகளின் அசமந்த போக்கு ~பரிதவிக்கும் நோயாளர்கள்..!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மருந்தாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காமை காரணமாக நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்த சம்பவம் நேற்று(05.04.2023) நீரிழிவு நோயாளர் சிகிச்சை பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நீரிழிவு நோய் கிளினிக் வாராந்தம் புதன்கிழமைகளில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று சுமார் 500 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற கிளினிக்கில் வைத்தியர்கள் வருகை தந்து நோயாளர்களை பார்வையிட்ட பின்னர் தமக்குரிய மருந்துகளை மருந்தகத்தில் பெறுவதற்கு காத்திருந்தபோது மருந்தாளர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நோயாளர்கள் வைத்திய அத்தியட்சகரிடம் நேரடியாக சென்று மருந்தாளர்கள் வரவில்லையெனவும், தாம் நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து ஒரு மருந்தாளர் கடமைக்கு வந்து நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பலதடவைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறன நிலைமைகளில் வைத்தியசாலை அத்தியட்சகரிடம் நோயாளர்கள் முறையிட்டும் வந்துள்ளனர்.

ஆனாலும் கிளினிக் நாட்களில் நோயாளர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் இருந்து பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து அதிகாலை 4:00 மணிக்கு வருகை தந்து சிகிச்சைக்காக காத்திருப்பது வழக்கமாகியிருக்கிறது.

அதிக தூரத்தில் இருந்து வருகை தந்து பல மணி நேரமாக காத்திருக்கும் நோயாளர்களுக்கான மருந்து வழங்குவதில் மருந்தாளர்களின் அசமந்தப் போக்கால் இவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றமையும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வயோதிபர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கிளினிக்குகளிற்கு வரும் நோயாளர்களுக்கு உரிய நேரத்திற்கு, மருந்தாளர்கள் வருகைதந்து மருந்துகளை வழங்க வேண்டும் என்பதே நோயாளர்களின் எதிர்ப்பார்பாகவும் வேண்டுகோளாகவும் உள்ளது.

இவ்வாறான மருந்தாளர்களின் அசமந்தப் போக்கை யாழ்.பிராந்திய சேவைகள் பணிப்பாளர் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கவனத்தில் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad