குடும்ப தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை!

கல்யாணில், 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை கொண்டார். இதில், 2 குழந்தைகள் இறந்தன. ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கணவன், மனைவி சண்டை
தானே மாவட்டம் கல்யாண் அம்பிவலியில் உள்ள மோஹனா, காத்கரிபாடாவில் வசித்து வருபவர் பிரதீப் வாக்(வயது40). மீனவர். இவரது மனைவி லட்சுமி(35). இந்த தம்பதிக்கு விஷால்(12), வன்ஸ்(7) என்ற இரு மகன்களும், நாஜூகா(10) என்ற மகளும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவர், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அப்போது பிரதீப் வாக் மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல பிரதீப் வாக் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டார்.

எலி மருந்து
இதற்கிடையே கணவர் திட்டியதால் மனமுடைந்த நிலையில் இருந்த லட்சுமி திடீரென வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து காலை உணவில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். தாய் விஷம் கலந்த உணவை கொடுத்ததை அறியாத குழந்தைகள் மூவரும் அதை சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் வயிற்றுவலியால் அலறித்துடித்தனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, வீட்டுக்குள் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி துடித்து கொண்டிருந்தார். மேலும் 3 குழந்தைகளும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள கல்யாண் மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

3 பேர் சாவு
அங்கு அவர்களது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக 4 பேரும் மும்பை சயான் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமி, சிறுமி நாஜூகா, சிறுவன் வன்ஸ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் விஷால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கல்யாண் அம்பிவிலி போலீசார் மருத்துவமனைக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பிரதீப் வாக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்பிவலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.