அண்ணனுக்காக உயிரையே கொடுத்த தம்பி! பதை… பதைக்க வைத்த வீடியோ

சென்னையில் குடும்ப சூழ்நிலையால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட போது அண்ணன் படிப்பை தொடர தம்பி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்கொலைக்கு முன்பு வீடியோ எடுத்த நிகழ்வு பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர், செட்டியாஅகரம் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன், மல்லிகாதேவி. இவர்களுக்கு தினேஷ்குமார், சந்தோஷ்குமார் என இரண்டு மகன்கள். ரகுநாதன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தினேஷ்குமாரும், சந்தோஷ்குமாரும் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தனர். சந்தோஷ்குமார், 9ம் வகுப்பு படித்தார்.

இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ரகுநாதன், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்ப சென்னை ஆழ்வார்திருநகர் சிக்னலை கடந்தார். அப்போது விபத்துக்குள் சிக்கி அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினார். இதனால் இரண்டு மகன்களின் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன்காரணமாக சந்தோஷ்குமார், பத்தாம் வகுப்புக்கு செல்லவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த 4.8.2016ல் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார் சந்தோஷ்குமார்.

இதுகுறித்து மல்லிகாதேவி கூறுகையில், “சந்தோஷ்குமார், நன்றாக படிப்பான். கல்வி கட்டணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகத்தில் தெரிவித்தனர். இதனால் அவனை அரசு பள்ளியில் சேர்க்க டி.சி.யை கேட்டோம். அப்போது கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகுதான் டி.சி தருவதாக சொல்லி விட்டனர். இதற்கிடையில் மாணவர் சேர்க்கை அரசு பள்ளியில் முடிந்து விட்டதால் இந்த ஆண்டு அவனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் அவனது அண்ணன் அந்த பள்ளியில் பிளஸ் 2 படித்தான்.

‘குடும்பத்தில் நிலவிய வறுமையால் அண்ணனுக்கு பீஸ் கட்டி படிக்க வையுங்கள். நான் அடுத்தாண்டு படித்துக் கொள்கிறேன்’ என்று சொன்னான். பெருந்தன்மையாக நடந்த அவனுக்குள் பள்ளி நடந்த சம்பவங்கள் மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. பீஸ் செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் அவன் மனம் பாதிக்கப்படும் வகையில் பேசியுள்ளனர்.


இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்வதற்கு முன்பு அவனது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளான். அந்த தகவல் இப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது” என்றார் கண்ணீர் மல்க.

தற்கொலைக்கு முன்பு சந்தோஷ்குமார் பேசிய வீடியோ ஒரு நிமிடம் 45 நொடிகள் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் சந்தோஷ்குமாரின் மரண வாக்குமூலம் இது.

“என்னுடைய சாவுக்கு அந்த பள்ளிதான் காரணம். மேலும் தகவல் வேண்டும் என்றால் அம்மாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள். என்னால் பேச முடியவில்லை. அம்மா, அப்பா, அண்ணன் இனியாவது சந்தோஷமாக இருங்கள். சண்டை போடாமல் இருங்கள். எனக்கு சின்னதாக இரண்டு ஆசைகள் இருக்கின்றன. அதை முடிந்தால் பண்ணுங்கள்.

இல்லை என்றால் வேண்டாம். என்னுடைய உடல் ஒருநாள் கோயமுத்தூரிலும், இன்னொரு நாள் சென்னையில் இருக்கணும். அடுத்து ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவர், என்னைப் பார்க்க வரணும். என்னை நினைத்து அழாதீர்கள். குட் பாய் என்பதோடு சந்தோஷ்குமாரின் வீடியோவும், அவரது வாழ்க்கையும் முடிந்து விட்டது.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையத்தில் கேட்டால், “மாணவன் சந்தோஷ்குமார் தற்கொலை குறித்து விசாரித்து வருகிறோம். அவரது வீடியோவில் பள்ளி பெயரை மட்டும் சொல்கிறார். அதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தில் விசாரித்தால் இந்த கல்வி ஆண்டு முதல் சந்தோஷ்குமார் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவனை பள்ளியிலிருந்தே நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

ரகுநாதன், மல்லிகாதேவியின் சொந்த ஊர் கோயமுத்தூர், சாய்பாபா காலனி. இதனால்தான் சந்தோஷ்குமார், தன்னுடைய உடலை கோயமுத்தூருக்கு கொண்டு செல்லுமாறு வீடியோவில் சொல்கிறார். இதுபோல அவரது தோழியை பார்க்க வர வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த இரண்டு ஆசைகளையும் சந்தோஷ்குமாரின் பெற்றோரால் நிறைவேற்ற முடியவில்லையாம்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad