ஆண்களுக்கு இணையாக பெண்களும் இதனை செய்கின்றார்களா? ஆய்வில் பரபரப்புத் தகவல்…

மது அருந்தும் விடயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது.

கடந்த 1891ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு, ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது.

ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது.

சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது, மது அருந்துவதில் தோன்றும் ஆண் பெண் சமத்துவத்தை ஓரளவு விளக்கலாம்.

1900களின் முற்பகுதியில் பிறந்தவர்களில், ஆண்கள், பெண்களைவிட இரட்டிப்பு மடங்குக்கும் மேல் (2.2 மடங்கு) மது அருந்தும் சாத்தியம் இருந்தது. ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம்

கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட 3.6 மடங்கு அதிகம்.

ஆனால் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்தது. எனவே 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள், பெண்களைவிட ஆண்கள் மது அருந்தும் வாய்ப்பு என்பது 1.1 மடங்கு மட்டுமே அதிகம்.

பிரச்சனைக்குரிய அளவில் குடிப்பது என்பது 1.2 மடங்கு மட்டுமே அதிகம். குடிப் பழக்கத்தால் உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது 1.3 மடங்கு மட்டுமே அதிகம்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகக் குழு உலகெங்கிலிருந்தும் வந்த இந்தத் தரவுகளை ஆய்வு செய்தது. ஆனாலும், இந்த தரவுகள் பெரும்பாலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தே கிடைத்த தகவல்களையே சார்ந்திருந்தன.

“மது அருந்துவது மற்றும் மதுவருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் ஆண்கள் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டன” என்று இந்த குழு முடிவு செய்தது.

“இந்த தற்போதைய ஆய்வு அந்த அனுமானத்தை கேள்விக்குள்ளாக்கி, இளம்பெண்கள் குறிப்பாக, போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க எடுக்கப்படும் தொடர்முயற்சிகளின் இலக்காக இருக்க வேண்டும்” என்று அது கூறுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றிவரும் பங்கு கடந்த பல தசாப்தங்களாகவே மாறி வருகிறது. இது இந்தப் போக்குகள் அனைத்துக்கும் இல்லாவிட்டாலும், சிலவற்றுக்காவது காரணம் எனலாம் , என்கிறார் லண்டன் பொதுச்சுகாதரம் மற்றும் வெப்பநிலைப் பிரதேச மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மார்க் பெட்டிக்ரூ.

“மது அதிக அளவில் தாராளமாக கிடைப்பதும், மது விற்பனை விளம்பரங்கள் பெண்களை, அதிலும் குறிப்பாக இளம் பெண்களை இலக்குவைப்பது போன்றவையும் இதில் ஒரு பங்காற்றுகின்றன” என்கிறார் அவர்.

“சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் மது அருந்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளைப் பற்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புரிய வைக்கவும், அந்த ஆபத்துகளை குறைப்பது எப்படி என்பதை விளங்கவைக்கவும் உதவ வேண்டும்” என்கிறார் அவர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad