உங்கள் முகராசி எப்படி?

மனிதர்களின் அங்க லட்சணங்கள் குறித்தும், அவற்றின் அமைப்புக்கு ஏற்ப உருவாகும் பலாபலன்கள் குறித்தும் விரிவாக விளக்கும் இந்த சாமுத்ரிகா லட்சணம், முக அமைப்பின் அடிப்படையில் சுவாரஸ்யமான சில பலாபலன்களை விளக்குகிறது. அதுகுறித்து நாமும் அறிந்துகொள்வோம்.

உருண்டை வடிவமான முக அமைப்பு: நிலவு போன்ற அழகிய முக அமைப்பு இது. இப்படியான முக அமைப்பு பெற்றவர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகத் திகழ்வார்கள். பூஜை, விரதங்கள் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். ஒரு பெண் இதுபோன்ற முக வடிவைப் பெற்றிருந்தால், அவள் லட்சியப் பெண்ணாகத் திகழ்வாள். உயர்ந்த மனோபாவத்துடனும், சிறந்த குணத்துடனும் இருப்பாள். இவர்களில் ஒருசிலர் பசுத்தோல் போர்த்திய புலியாக இருப்பார்கள். பார்ப்பதற்குச் சாதுவாகத் தோன்றினாலும், இக்கட்டான சூழலில் புலிப்பாய்ச்சலாக இவர்களுடைய செயல்பாடுகள் அமையும். இந்தப் பெண்ணால் அவளுடைய கணவனுக்கு அதிர்ஷ்டம் வந்துசேரும்.

சதுர முக அமைப்பு: இத்தகைய முக அமைப்புடைய ஆண்கள் வீரம் மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். எனினும், எளிதில் ஆவேசப்படுவது இவர்களது குறையாக அமையும். எந்தப் பிரச்னையையும் தேக வலிமையைக் கொண்டு தீர்க்க முயற்சிப்பார்கள். இவர்களுக்குக் காதல் திருமணம் ஏற்படும். உறவிலேயே திருமணம் கைகூடி வரவும் வாய்ப்பு உண்டு. எனினும், இவர்களது குடும்ப வாழ்வில் சலசலப்புகள் ஏற்படும். இவர்கள் எந்த விஷயத்திலும் எளிதில் பணிந்து போகமாட்டார்கள். மேலும், இந்த அன்பர்களுக்கு இசையில் ஆர்வமும், அதன் மூலம் பெரும்புகழும் கிடைக்கும்.

நீள் சதுர முக அமைப்பு: இத்தகைய முக அமைப்பு பெற்றவர்கள் அடக்கமும், அமைதியும் நிறைந்தவர்களாக விளங்குவார்கள். எதிலும் மெதுவாகச் செயல்படுவார்கள். எந்த விஷயத்திலும் ஒரு தடவைக்குப் பல தடவை யோசித்தே செயல்படுவார்கள். மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டாலும், இவர்கள் நிதானமாக யோசித்தே முடிவெடுப்பார்கள். குடும்பத்தில் பணிவுடன் நடந்துகொள்வர், அச்சமற்றவர்கள். தங்கள் கருத்தை தைரியமாக முன்வைக்கக்கூடியவர்கள்.

முக்கோண வடிவ முக அமைப்பு: இத்தகைய முக அமைப்பைப் பெற்றிருக்கும் ஆண்கள், மிகுந்த தந்திரசாலியாக இருப்பார்கள். இந்த நபர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்தவித பிரச்னைகளையும் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு வெல்வார்கள். எளிதில் எவரையும் நம்பமாட்டார்கள். இவர்களுக்குக் கல்வியறிவு சுமாராகவே இருக்கும். எனினும், அதிக அனுபவங்கள் இருக்கும். இவர்கள் அதிகம் உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்பவர்களாக விளங்குவார்கள். குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் குழந்தைகள் இவர்களுக்கு அடங்கி நடக்க மாட்டார்கள். இவர்களது வாழ்வில் உயர்வும், வீழ்ச்சியும் சர்வ சாதாரணமாக இருக்கும். புரட்சிகரமானவர்கள்.

முட்டை வடிவ முக அமைப்பு: நடுநிலை இயல்பு படைத்தவர்கள். வீண் பயமும், சுயநலமும் இவர்களிடம் இருக்கும். எல்லோரையும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள். ஆனாலும், வாழ்நாள் முழுவதும் ஏதேனும் பிணிகளுடன் வாழ்க்கையை நடத்துவர். முக அமைப்பு போன்று தலைமுடியின் தன்மை, நெற்றி அமைப்பு, கண்களின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டும் பலாபலன்களை வரையறுக்கிறது சாமுத்ரிகா லட்சணம்.

தலைமுடியும் பலன்களும்: பட்டுப் போன்று மிருதுவானதாகவும், சிக்கல் இன்றித் தெளிவாகவும் தலைமுடி அமைந்திருப்பின், மென்மையான இயல்பு படைத்தவர்கள். நரம்பு தொடர்பான பிணிகள் வாட்டும். பொதுவாக, உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இவர்களது திருமணம் காதல் அடிப்படையில் நடக்கும். முடி அடர்த்தியாகவும், நல்ல கருமை நிறம் கொண்டதாகவும் இருப்பின் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பர். இவர்களுக்கு மன அமைதி கிடையாது; குழப்பம் அதிகம் இருக்கும். அழகிய துணைவர் அமைவார்.

தலைமுடி அடர்ந்தும் செம்பட்டை நிறமாகவும் இருந்து, சரிவரப் படியாமல் விரைப்பாக இருந்தால், உலக ஞானம் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். நட்புக்கு இனியவர். எல்லாருடனும் சட்டெனப் பழகும் தன்மை கொண்டவர்.

அழுத்தமான, அடர்ந்த, தடித்த ரோமங்களைக் கொண்டவர்கள் இயல்பில் கோழையாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பற்றாக்குறையுடன் திகழ்வார்கள். மத்திம காலத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். அதிகமான வளர்ச்சியின்றி குட்டையான சற்று வெண்மை படர்ந்த முடியைப் பெற்றவர்கள், நல்ல உடற்கட்டுடன் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பாலியல் உணர்வுகள் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், முறைகேடாக நடக்கமாட்டார்கள்.

அலை அலையான வகையுடன் கூடிய முடியைப் பெற்றவர்கள் தன்னடக்கம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். எவ்வளவு சிக்கல் வந்தாலும் பணிந்தே காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். வருமானம் பெரிதாக இருக்காது என்றாலும், இருப்பதைக் கொண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.

சுருள் சுருளாக முடியைப் பெற்றவர்கள் எனில், இவர்களது தோற்றத்துக்கும் உள்ளத்துக்கும் தொடர்பு இருக்காது. மேலோட்டமாகப் பார்த்தால் அப்பாவியாகவும், கோழை போன்றும், அசடுகள் போன்றும் தோற்றம் அளிக்கும் இவர்கள், இயல்பில் அவற்றுக்கு நேர்மாறான தன்மைகளை உடையவர்கள். இவர்களுடைய திருமண வாழ்வில் அமைதிக் குறைவு இருக்கும்.

நெற்றியின் லட்சணம்: விசாலமான நெற்றி இருப்பது ஞானத்தின் சின்னமாகும். கல்வி, கலைகளில் சிறந்தவர்கள். 45 வயதுக்கு மேல் நிலையான வாழ்வு அமையும். சிக்கன மனப்பான்மை அளவுக்கு மீறி இருக்கும். முப்பது வயது வரை போராட்டமான வாழ்க்கை அமையும். பிறகு திருப்பம் ஏற்படும்.

நெற்றி சற்று மேடாக இருந்தால், லட்சுமியின் அருள் கிட்டும். இவர்கள் பிறந்த குடும்பமே வளம் கொழிப்பதாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த சூழலில் கவலையற்று வளருவார்கள். சுருக்கம் நிறைந்த நெற்றியைக் கொண்டவர்கள், சஞ்சல சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். சந்தேகம் இவர்களுடைய இயல்பாக இருக்கும். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். சொந்தக் காலில் நிற்பார்கள். இவர்களுக்கு அமையும் மனைவி நேர் எதிரான குணமுடையவராக இருப்பார். குடும்ப வாழ்வில் நிம்மதியும், குழந்தைகள் மூலம் வாழ்வில் உயர்வும் உண்டு.

அடிக்கடி வியர்வை வழியும் நெற்றியை உடையவர்கள் நாவன்மை மிகுந்தவராக இருப்பர். வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற கலைகளில் ஒன்றை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டிருப்பார்கள்.

கண்களின் லட்சணம்: கண் புருவத்துக்கு மத்தியில் இருக்கும் இடைவெளி குறுகி நெருக்கமாக இருந்தால், அது நட்புறவு மனப்பான்மையின் அடையாளம். புருவங்களுக்கான இடைவெளி அதிகமாக இருந்தால் பொறியியல், கலை ஆகிய துறைகளில் வல்லுநராக இருப்பார்கள். பெண்களுக்கு புருவங்கள் இடைவெளி இல்லாமல் இருப்பது சுப லட்சணம் ஆகும். வாழ்வில் நிறைந்த சௌபாக்யம் நிலவும்.

புருவம் பிறை வடிவில் இருந்தால் மிகவும் மென்மையான உணர்வு படைத்தவர்கள். இவர்கள் செல்வந்தர்களாகவும், கல்வியில் உயர் தகுதியைப் பெற்றவர் களாகவும் விளங்குவர். சரஸ்வதி தேவியின் புருவம் பிறைவடிவில் இருக்கும் என்று ஐதீகம்.

வில் போன்ற புருவம் பெண்களுக்கு இருந்தால், அவர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்கள். அன்புடன், பாசத்துடன் குடும்பத்தில் பழகுவார்கள். ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். அதிகம் வளையாமல் நீண்டு இருக்கும் புருவ அமைப்பு உடையவர்கள், சற்று முரட்டுக் குணம் மற்றும் பிடிவாதம் கொண்டவர்களாக விளங்குவார் கள். இவர்களுக்கு ராணுவம், காவல்துறை போன்ற துறைகள் சிறந்தவை. பெரிய பொறுப்பு களை எளிதில் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்படும் ஆயினும், நிம்மதி குறையாது.

புருவங்கள் ஒரு மெல்லிய கோடு போன்று இருக்கும் அன்பர்கள் கபடு, சூது இல்லாத அப்பாவிகளாக இருப்பார்கள். எளிதில் அனைத்தையும் நம்பி விடுவார்கள். கண்கள் உட்புறமாக ஆழ்ந்திருப்பின் தாராள மனம் படைத்தவர்கள். பிறருக்கு உதவுபவர்கள். இவர்களுக்கு கல்வி அறிவு குறைவு. எனினும், வாக்கு சாதுர்யம் அதிகம்! ஆழ்ந்த கண்களை உடைய பெண்கள் லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள். சுகபோக வாழ்க்கையில் திளைப்பார்கள். எனினும், மண வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது.

கண்கள் அளவுக்கு அதிகமாக அகன்றும், சற்று கோணலாகவும் இருந்தால், சந்நியாசி போன்ற பற்றற்ற வாழ்க்கை வாழ்வார்கள். மருத்துவம், ஜோதிடம், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றில் பிடிப்பும் நம்பிக்கையும் பயிற்சியும் இருக்கும். பதவியில் பற்று ஏற்படாது. இவர்களுக்கு மனைவியிடம் விருப்பம் இருக்காது. குடும்ப வாழ்வில் ஆழமான பிடிப்பு ஏற்படுவது கடினம். இதேபோன்ற அமைப்பு பெண்ணுக்கு இருந்தால் காரியவாதியாக இருப்பார்கள். பூனைக் கண்களைப் பெற்றிருப்பவர் ஆணாயினும், பெண்ணாயினும் அதிர்ஷடம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.