குழந்தைகள் இறப்பதற்கு பிச்சை எடுக்கும் ஒரே இடம் - சிரியா

வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின், இராக். இவற்றைத் தாண்டினால் சிரியா. மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ளது சிரியா. சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ். சரித்திரத்தில் அழுத்தமான பதிவு பெற்ற நகரம். உலகில் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் தொன்மையான சில நகரங்களில் ஒன்று. இங்கு அதிகம் வசிப்பது சன்னி அரபு இனத்தவர்.


கடந்த ஒரு வருடமாகவே சிரியாவில் போர். உக்கிரமான யுத்தம். எந்த வெளிநாட்டுடனும் அல்ல (குறைந்தபட்சம் வெளிப்படையாக). உள்ளுக்குள்ளேயே நடந்து உயிர்களைக் காவு வாங்கும் புரட்சி, அடக்குமுறை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கிராமத்தை விட்டு கிராமம், நகரத்தை விட்டு நகரம் என்று இடம் பெயரத் தொடங்கி இப்போது நாட்டின் எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம். நோய்வாய்ப்பட்டவர்களின் நிலை இன்னும் படுமோசம். ஓடவும் முடியாது, உள்நாட்டில் மருத்துவ வசதிகளும் கிடையாது.

தரையில் நடக்கும் பயங்கரம் போதாதென்று வான்வெளித் தாக்குதல் வேறு. குண்டு வீசுவது அமெரிக்கா. அவர்கள் இலக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கூடாரங்கள். ஆனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காதா என்ன?

சிரியாவின் (துருக்கிக்கு அருகில் உள்ள) எல்லையில் குர்து இனத்தவரைக் குறிவைத்து ஐ.எஸ்.தாக்குதல் நடத்த, அமெரிக்க அணியின் வான்வெளித் தாக்குதல் மேலும் மேலும் தீவிரமடைகிறது. 21 தாக்குதல்கள், இருபுறமும் நடந்துள்ளன. தீவிரவாதிகளின் தரப்புக்கு பலத்த சேதம். ஆனால் வெறியில்அவர்கள் மேலும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள்.

‘‘எங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்த முடியவில்லை. எனவேதான் வான்வழியாகத் தாக்குகிறோம்’’ என்று வியாக்கியானம் கூறுகிறது வெள்ளை மாளிகை.

இப்படி உள்நாட்டு அவதிகளால் தடுமாறும் மக்களால் ‘‘அரசாங்கமே, எங்களைக் காப்பாற்று’’ என்று கேட்க முடியவில்லை. என்ன காரணம்? ஒருவேளை பலவீனமான அரசாங்கம் கைகட்டிக் கொண்டிருக்கிறதா? இல்லை தன் பங்குக்கு அதுவும் மக்களை வாட்டி வதைக்கிறது!

கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். முப்பது லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.

என்னதான் நடக்கிறது சிரியாவில்? ஒரு பக்கம் சிரியா அரசு மறுபக்கம் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு. இரண்டும் கடுமையாக மோதிக் கொள்ள, இப்போதைக்கு சிரியா நாட்டில் சுமார் 40 சதவீதம் பேர்தான் அரசின் கட்டுப்பாட்டில்!

ஐ.நா. சபையின் உண்மை அறியும் குழு ஒன்று சிரியாவுக்குச் சென்றது. அவர்கள் மீதும் தாக்குதல். ‘‘சந்தேகமில்லாமல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது’’ என்று யாருக்கும் சந்தேகமில்லாத ஒரு விஷயத்தை அறிக்கையாக வெளியிட்டது ஐ.நா.

‘‘ஆமாம். துருக்கி நாட்டு ஜெட் விமானம் ஒன்றை நாங்கள்தான் சுட்டோம். இப்போது அதற்கு என்னவாம்?’’ என்று தன் குற்றத்தைக் கூசாமல் ஒத்துக்கொண்டிருக்கிறது சிரியா அரசு. (இதைத் தொடர்ந்து துருக்கி தன் ஆதரவை சிரியாவில் உள்ள புரட்சியாளர்களுக்கு அளிக்கத் தொடங்கிவிட்டது வேறுவிஷயம்).

ஐ.நா.வின் சிறப்பு தூதராக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் நியமிக்கப்பட்டார். சிரியாவுக்கு ஒரே ஒரு விசிட். அவ்வளவுதான். தன் தூதர் பதவியியை ராஜினாமா செய்து விட்டார் அவர். தன் அமைதி திட்டத்தை இடது சுண்டு விரலால் தீண்டக் கூட சிரியா தயாராக வில்லை என்பதால் எழுந்த கோபம்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் தலையை நுழைத்தது ‘ஐ.எஸ். ஒட்டகம்’ இன்று சிரியாவின் பெரும்பகுதி அதன் பிடியில். சில வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் புரிந்த அநியாயங்களையும் தாண்டிச் செயல்படுகிறது தீவிர(வாத) அமைப்பான ஐ.எஸ்.கள்ள உறவில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஒரு பெண்மீது கற்களை எறிந்து கொன்றார்கள். சமீபத்திலும் இதே காரணத்துக்காக மற்றொரு பெண் கொல்லப்பட்டாள். இந்த முறை அவளது தந்தையே கற்களை எரியும்படி ஆனது. ‘’நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்’’ என்று கூறியபடியே அந்தப் பெண் கல்லடிக் கொலைகளுக்குத் தயாரானாள்.

சிறுவன் ஒருவன் ரம்ஜான் நோன்பைக் கடைப்பிடிக்கவில்லை. பொது இடத்தில் சில நாட்கள் அவன் கட்டி வைக்கப்பட்டு காட்சிப் பொருளானான். நோ உணவு, நோ நிழல். ஐ.எஸ். ஏன் சிரியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அது ஒரு தனிக்கதை.

சிரியாவின் பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ள ஐ.எஸ். அமைப்பு குறித்து அறிவது அவசியம். அந்த அமைப்பு குறித்து அறிந்து கொள்ள முஸ்லிம்களின் இரு பிரிவுகள் குறித்துப் புரிந்து கொள்வது அவசியம்.
Tags

Top Post Ad

Below Post Ad