விடுதலை புலிகளின் பல மில்லியன் டொலர்! யாழ்ப்பாண மூளைசாலிகளுக்கு இறுதி எச்சரிக்கை ஏமாறாதீர்கள்.

அமெரிக்காவை உலுப்பிய பல மில்லியன் கறுப்பு டொலர் மோசடி இப்போது யாழ்ப்பாணத்தையும் இறுக்கி பிடித்து உள்ளது.

இது ஒரு மிகவும் நவீன, நூதனமான, நுட்பமான மோசடி ஆகும்.

இம்மோசடியிலும் கை தேர்ந்தவர்களாக நைஜீரிய நாட்டவர்கள் உள்ளார்கள்.

அமெரிக்க டொலர்களில் ஒரு வித கறுப்பு மை பூசப்படுகின்றது. விமான நிலையங்களூடாக கடத்தி வருவதற்கு வசதியாகவே மையை பூசுகின்றனர் என்று கூறப்படுகின்றது. ஆனால் உரிய இடங்களுக்கு இவற்றை கொண்டு வந்து சேர்த்த பின்னர் மையை அகற்ற பிரத்தியேக அமில திரவம் தேவைப்படுவதாக கூறுகின்றனர். சாதாரண அமிலங்களால் மையை அகற்ற முடியாது என்று ஒரேயடியாக சொல்லி விடுகின்றனர்.

மேற்சொன்ன அமில திரவத்தை மலேசியா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில்தான் வாங்க முடியும் என்றும் ஒரு நடுத்தர அளவு போத்தலின் விலை 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

கறுப்பு டொலர்களை பேராசை காரணமாக விலை கொடுத்து குட்டி பணக்காரர்கள் பலரும் வாங்குகின்றனர். மலிவு விலைக்கு வாங்கி விட்டதாக மனதுக்குள் மகிழ்கின்றனர். ஆனால் குறித்த திரவத்தை வாங்குகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றபோதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர். பெரும்பாலும் திரவம் கிடைப்பதே இல்லை. கிடைத்தாலும் மையை அகற்றுவதாக இல்லை.

இந்நிலையில் இது ஒரு சுத்த மோசடி என்றும் திரவத்தை விற்பதற்காக உருவாக்கப்பட்ட ஏமாற்று வித்தை என்றும் ஏமாற்றப்பட்டவர்களில் ஒரு தரப்பினர் சொல்கின்றார்கள்.

இதே நேரம் வேறு ஒரு விதத்திலும் இம்மோசடி இடம்பெறுவதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. கறுப்பு டொலர்களை கொண்டு வந்து வைத்திருக்கின்ற நபர்களே திரவம் ஒன்றை பயன்படுத்தி மையை அகற்றி காட்டுகின்றனர். இதனால் திருப்தி அடைகின்ற குட்டி பணக்காரர்கள் குறைந்த விலை கொடுத்து கறுப்பு டொலர்களையும், அதிசய திரவத்தையும் வாங்கி விடுகின்றனர்.

ஆனால் இவர்கள் கறுப்பு டொலர்களை வாங்கி மை அகற்றுகின்ற முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றபோதுதான் அவை போலி டொலர்கள் என்று தெரிய வருகின்றது.

கடத்தல் பேர்வழிகளில் அதீத கில்லாடிகளும் உள்ளனர். இவர்கள் கறுப்பு டொலர் கட்டுகளின் ஆரம்பத்திலும், இடையிலும், இறுதியிலும் கறுப்பு நிற ஒரிஜினல் டொலர்களை வைத்திருப்பார்கள். இந்த ஒரிஜினல் டொலர்களை வைத்தே வித்தை காட்டுகின்றனர்.

மூளைசாலிகள் என்று அவர்களை சொல்லி கொள்கின்ற யாழ்ப்பாணத்தார் பலரும் பல மில்லியன் டொலர் கறுப்பு டொலர்களை வாங்கி வைத்து உள்ளனர். சிலருக்கு அவர்கள் ஏமாற்றப்பட்டது இன்னமும் தெரியாது. ஏமாற்றப்பட்டதை ஏற்று கொள்கின்ற பக்குவம் பலருக்கு கிடையாது. கோடீஸ்வரர் ஆகின்ற நப்பாசை மாத்திரம் மனதில் மிஞ்சி நிற்கின்றது.

யாழ்ப்பாணத்தாருக்கு இவற்றை விற்கின்றபோது புதிய கதை ஒன்று சொல்லப்படுகின்றது. இவற்றை சமாதான காலத்தில் புலிகள் கடத்தி கொண்டு வந்திருந்தனர் என்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் நிலத்தில் பத்திரமாக புதைத்து விட்டு சென்றிருந்தனர் என்றும் புதையல் தோண்டுபவர்களால் இப்போது இவை தோண்டி எடுக்கப்பட்டன என்று புரளிகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன.