அமெரிக்க போர் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள். கருங்கடல் பகுதியில் பெரும் பதற்றம்..!

அமெரிக்க யுத்தக்கப்பல் ஒன்றுக்கு மிகவும் நெருக்கமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் பறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த 10ஆம் திகதி கருங்கடல் பகுதியில் வைத்து இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை "ஆபத்தானது மற்றும் தொழில் நிபுணத்துவம் அற்ற நடத்தை" என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய போர் விமானங்கள் தொடர்புபட்ட மூன்று வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

ஒரு சம்பவத்தில் ரஷ்யாவின் இரு எஸ்.யூ 24 ஜெட்களும், மற்றொன்றில் எஸ்.யூ 24 ஜெட் ஒன்றும், மூன்றாவது மிகப்பெரியதாக ஐ.எல் 38 விமானமும் தொடர்புபட்டுள்ளது.

இதன்போது எஸ்.யூ 24 போர் விமானம், யூ.எஸ்.எஸ் போர்டர் அமெரிக்க யுத்தக் கப்பலுக்கு 300 அடி உயரத்தில் 200 யார்கள் வரை நெருங்கி வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.