ஆட மறுத்ததால் நண்பனை போட்டுத்தள்ளிய சக நண்பன்!

மும்பையில், களியாட்ட நிகழ்வு ஒன்றில் நடனமாட மறுத்த தன் நண்பரைக் கொன்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றுக்கு, காதலர் தினத்தன்று மதியம் ஜாதவ், ஸ்ரீவத்கர் ஆகிய நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். அங்கு மது அருந்தியபடி களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது. அந்தப் பாடலுக்கு ஜாதவ்வை நடனமாடுமாறு ஸ்ரீவத்கர் கூறினார். ஆனால் அதற்கு ஜாதவ் மறுத்துவிட்டார். இருவரும் போதையில் இருந்ததால், இந்த விடயம் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாய்ப்பேச்சு முற்றி கைகலப்பாக மாறியது. உடனே அருகே இருந்தவர்கள் இடையில் புகுந்து இருவரையும் விலக்கிவிட முயற்சித்தனர். அப்போது, கோபத்தின் உச்சத்தில் இருந்த ஸ்ரீவத்கர் அருகே இருந்த மரக்கட்டையொன்றை எடுத்து ஜாதவ்வின் தலையில் பலமாக அடித்தார்.

இதனால் படுகாயமடைந்த ஜாதவ் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பேரில் பொலிஸார் ஸ்ரீவத்கரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.