உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

காதல் தகராறில் பெண் என்ஜினீயர் படுகொலை: தாய்-மகள் உயிருக்கு போராட்டம்..!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரில் வசித்து வந்த இந்துஜா என்ற பெண் என்ஜினீயர் காதல் தகராறில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்துஜாவும், வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபரும் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்துஜா பி.டெக் முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் ஆகாஷ், பி.சி.ஏ. படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

இதனால் இந்துஜாவின் பெற்றோர், மகளுக்கு உறவுக்கார பையன் ஒருவனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் இதுபற்றி கேட்பதற்காக நேற்று முன்தினம் இரவு இந்துஜாவின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது, அவர் இந்துஜாவுடனான காதல் பற்றியும், அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்றும் தெரிவித்தார். இதற்கு இந்துஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது. அவரது தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகியோரும் ஆகாசை கண்டித்தனர்.

இதனால் தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆகாஷ், இந்துஜா மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

இதன் பின்னரும் ஆத்திரம் தீராத ஆகாஷ், ரேணுகா, நிவேதா ஆகியோரது உடலிலும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். இருவரும் உடல் கருகிய நிலையில் கூச்சல் போட்டனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரேணுகா, நிவேதா இருவரின் உயிரையும் காப்பாற்ற டாக்டர்கள் போராடினர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவில் ரேணுகா, நிவேதா இருவரும் வானகரத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் பிரச்சனையால் ஆதம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் வித்யா, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் காதல் தகராறில் இந்துஜா என்ற பெண் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் காதல் வலையில் விழுந்துள்ள பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.