வெளிநாட்டு வேலைக்கு சென்ற பெண்களுக்கு நேர்ந்த நிலை!

 


கணவர்களை பிரிந்து வாழ்ந்த 3 பெண்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி (32), வடிவுக்கரசி (38), வள்ளி (35).

மூன்று பேரும் கணவர்களை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்பம் நடத்த இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் தங்களது குழந்தைகளுடன் இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம், குடும்ப கஷ்டங்கள் தீரும் என இவர்களுக்கு ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார். பின்னர் புரோக்கர் ஒருவர் பக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரேபியர் ஒருவரது வீட்டில் தங்கி வேலைப்பார்க்க மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம், தினமும் வயிறார உணவு என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த பெண்களுக்கு ரொட்டியும் தேநீரும் மட்டும் கொடுக்கப்பட்டதாகவும், சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாகவும் கூறபடுகின்றது.

புரோக்கர் தங்களிடம் கூறியது போல 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டதற்கு அந்த 3 பெண்களில் ஒருவரான வள்ளியை அந்த வீட்டில் உள்ள அரேபியர் துன்புறுத்தியதாகவும், ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு ஊருக்கு செல்லும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 6 மாதங்களாகத் தவித்து வந்த 3 பெண்களில் வள்ளி தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாட்ஸ் அப் மூலம் இங்குள்ள உறவினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உதவி கோரினார். இங்குள்ள உறவினர்கள் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

இதனை யூடியூப்பில் பார்த்த பக்ரைனில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது அன்னை தமிழ் மன்றம் என்ற தமிழர் நலனுக்கான அமைப்பின் மூலம் தூதரகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

உடனடியாக காவல் துறையினர் மூலம் அந்த அரேபியர் வீட்டில் பணிப்பெண்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான டிக்கெட் மற்றும் பயண செலவுக்கான உதவிகளை செய்து செந்தில் குழுவினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை சென்னை வந்த 3 பெண்களும் சொந்த ஊர் திரும்ப காரணமாக இருந்தவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்கள்.

இதனிடையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் பாதுகாப்பான ஏஜண்டுகள் மூலம் செல்வதே பாதுகாப்பானது என்றும், இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் மூலம் சென்றால் வீட்டு வேலைக்கான அடிமையாக விற்றுவிடுவார்கள் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Tags

Top Post Ad

Below Post Ad