ஒருதலை காதலால் யாழில் பெண் அலுவலர் கொடூர கத்திக் குத்து!! யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் ஒருதலை காதலினால் சக பெண் ஊழியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் யுவதியும் , இளைஞனும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த , திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் உத்தியோகஸ்தர் , அங்கு கடமை புரியும் சக பெண் உத்தியோகஸ்தர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை பெண் உத்தியோகஸ்தர் ஏற்க மறுத்து வந்த நிலையில் , அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆண் உத்தியோகஸ்தரை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் அலுவலகத்தில் இருவரும் கடமையில் இருந்தபோது திடீரென ஆண் உத்தியோகஸ்தர் , பெண் உத்தியோகஸ்தர் மீது சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு அலுவலக மலசல கூடத்திற்குள் சென்று தாழிட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் உத்தியோகஸ்தரை, அங்கு கடமையில் இருந்த சக உத்தியோகஸ்தர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.

அதேவேளை , அப்பகுதியால் சிவில் உடையில் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பில் அறிந்து அலுவலகத்திற்குள் சென்றபோது , கத்தியால் வெட்டிய நபர் மலசல கூடத்திற்குள் தாழிட்டு இருப்பதனை அறிந்து , அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.

எனினும் எந்த சத்தமும் இல்லாத நிலையில் கதவினை உடைத்து திறந்த போது , அந்நபர் தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அவரை அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

அதேவேளை , கத்தியால் குத்திய நபரின் அலுவலக மேசை லாச்சியினுள் வேறொரு கத்தியும் , மற்றுமொரு கூரிய ஆயுதமும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரச அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் யாழில் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.