தங்கையின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு-தற்கொலை செய்த அக்கா!

 


தங்கையின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் அதை தட்டிக்கேட்ட தன்னை அடித்து துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கணவருக்கு வீடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இளம்பெண். போலீசாரின் விசாரணையில் தங்கையின் கணவருடன் அக்காவே கள்ள உறவில் இருந்திருக்கிறார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருப்பதை தெரிந்ததும், அதில் ஏற்பட்ட தகராறு – மன உளைச்சலில் அக்கா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம் பெயிண்டர் ஆக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செண்பகவல்லி என்ற மனைவியும் மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். செண்பகவல்லியின் தங்கை லாவண்யாவிற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜோசப் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக லாவண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக உதவி செய்ய செண்பகவல்லி சென்றுள்ளார். அப்போது தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதற்காக லாவண்யா வீட்டில் மாடியில் உள்ள அறையில் குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார் செண்பகவல்லி. அப்போது ஜோசப்புக்கும் அவருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

பிரசவத்திற்கு பின்னும் நீண்ட நாட்கள் தங்கை வீட்டு மாடியிலேயே தங்கி இருந்திருக்கிறார் செண்பகவல்லி. இந்நிலையில் ஜோசப்பிற்கு அமிர்தா என்ற பெண்ணுடன் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜோசப்பிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினமும் இதேபோல் ஜோசப்பிடம் கேட்டு தகராறு செய்யவே ஆவேசத்தில் செண்பகவல்லியை அடித்திருக்கிறார் ஜோசப்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கணவன் பொன்னுரங்கத்திற்கு, ஜோசப் தன்னை அடித்து துன்புறுத்துவதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை எடுத்துக்கொண்டு பொன்னுரங்கம் போலீசில் புகார் அளிக்க போலீசார் செண்பகவல்லி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு ஜோசப்பை கைது செய்து விசாரணை செய்ய செய்தபோதுதான் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளது.