ஹிஜாப் அணிந்தது குற்றமா….? பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை….!!

கனடா நாட்டில் மத அடிப்படையிலான எந்த குறியீடுகளையும் பொது இடங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அதன்படி நீதிபதிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்ற பொது சேவை பணியாளர்கள் மதம் தொடர்புடைய குறியீடுகளை அவர்களின் பணியிடங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்பது தான் அச்சட்டம்.

இந்நிலையில், இச்சட்டத்தை மீறி இஸ்லாம் மதத்தை சேர்ந்த பதேமா அன்வாரி என்ற பெண் ஆசிரியை ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார். எனவே குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம் அவரை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றம் செய்திருக்கிறது. அதாவது, கடந்த 2019-ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூபெக் மதச்சார்பின்மை சட்டத்தை மீறியதால் இவ்வாறு அதிரடியான முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தற்போது, இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்த ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பச்சை நிறத்திலான ரிப்பன்களை பள்ளி வளாகத்தில் தொங்கவிட்டனர். மேலும், கடிதம் எழுதும் இயக்கத்தை தொடங்கி சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி இருக்கிறார்கள்.

எனினும், கியூபெக் தலைவரான பிராங்காய்ஸ் லெகால்ட் இச்சட்டம் நியாயமாகவும், சமமாகவும் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், கனடா நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது, தனிமனிதர் எவரும் தாங்கள் அணியும் ஆடை மற்றும் மத நம்பிக்கையால் அவர்களின் பணியை இழக்கக் கூடாது என்று கூறியிருக்கிறது.