ஐ.நா-வில் கைலாசா… மோடியைச் சீண்டும் நித்தியானந்தா!

பல்வேறு வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற நித்தியானந்தா, ‘கைலாசா’ என்கிற தேசத்தை நிர்மாணித்திருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார். தெற்கு அமெரிக்காவின் ஈகுவாடார் தீவு அருகே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அந்தப் புதிய தேசத்தை இதுவரை உலக நாடுகள் ஏதும் அங்கீகரிக்க வில்லை. இந்தச் சூழலில், ஐ.நா-வின் சிறுபான்மையினர் விவகாரக் கவுன்சில் கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதியாக ஒருவர் பங்கேற்றிருப்பதும், இந்துச் சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதியாகத் தன்னை நிலைநிறுத்த நித்தியானந்தா முயற்சி செய்வதும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. வரும் ஜனவரி 3-ம் தேதி, நித்தியானந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், ‘கைலாசா’ தொடர்பான சர்ச்சை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது!

உலகெங்கும் சிறுபான்மைச் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகள், குறைகள் குறித்துப் பேசுவதற்காக, ஆண்டுக்கொரு முறை ஐ.நா-வின் சிறுபான்மையினர் விவகாரக் கவுன்சில் கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில், கடந்த டிசம்பர் 3-ம் தேதி ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 14-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கைலாசா தேசத்தின் சார்பில் பங்கேற்றுப் பேசியிருக்கும் ஶ்ரீ நித்ய மோக்‌ஷப்ரியானந்தா என்பவர், “இந்தியாவில் இந்துக்களுக்கும் அவர்களின் வழிபாட்டு முறைகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. நித்தியானந்தா போன்ற இந்து மதக் குருமார்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. மீடியாக்கள் மூலமாகப் பொய்யான செய்திகளைத் திட்டமிட்டே பரப்புகிறார்கள்” என்று வெடித்துத் தீர்த்திருக்கிறார். இந்தப் பேச்சு, ஐ.நா-வின் இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நித்தியானந்தா மீது ‘இன்டெர்போல்’ அமைப்பு ‘ப்ளூ கார்னர்’ நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. அவர் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்த உலக அரசுகள், இன்டெர்போலிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டுமென்பது நோட்டீஸின் சாரம்சம். இந்தச் சூழலில், ‘கைலாசா’ நாட்டின் பிரதிநிதியாக ஒருவர் ஐ.நா-வரை சென்றிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நித்தியானந்தா வின் முன்னாள் சிஷ்யர்கள் சிலர், “ஐ.நா-வில் நித்தியானந்தா முன்வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டு புதியதல்ல. ‘இந்தியாவில் இந்துக் களுக்குப் பாதுகாப்பு இல்லை, இந்து மதச் சடங்குகளைக் கடைப்பிடிக்க பல்வேறு தொந்தரவுகள் நிலவுகின்றன’ என்று 2018, 2019-ம் ஆண்டுகளிலேயே ஐ.நா-வுக்குப் புகார் கடிதங் களை அனுப்பியிருந்தார். இந்தியாவிலிருந்து தலைமறைவான பிறகு, கடந்த ஜூலை மாதம் ஐ.நா நடத்திய ‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’ கூட்டத்திலும் ‘கைலாசா’ சார்பில் பங்கேற்று, இந்தியாவில் தன் ஆசிரமத்தைச் சேர்ந்த பெண்கள் தாக்கப்படுவது குறித்துப் புகார்களை முன்வைக்க வைத்தார். தற்போது, ஐ.நா அரங்கத்துக்குள்ளேயே அமர்ந்து பேசும் அளவுக்குத் தன் ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஐ.நா-வில் ‘கைலாசா’ சார்பில் பேசியிருக்கும் மோக்‌ஷப்ரியானந்தா சென்னையைச் சேர்ந்தவர் தான். மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் தூரத்து உறவினரான இவர், இன்ஜினீயரிங் முடித்ததும் நித்தியானந்தாவுடன் சேர்ந்து கொண்டார். வெளிநாட்டுப் பக்தர்களைக் கையாளும் பொறுப்பு இவரிடம் அளிக்கப் பட்டிருந்தது. தற்போது நித்தியானந்தா தலைமறை வாகிவிட்டதால், நித்தியானந்தாவின் வெளி நாட்டுத் தொடர்புகளை மோக்‌ஷப்ரியானந்தாதான் கவனித்துக்கொள்கிறார். ஐ.நா நடத்தும் இப்படியான சிறு கூட்டங்களில், எந்த அமைப்புகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். திபெத், தைவான் போராட்டக் குழுவினர்கூட இப்படி பல்வேறு கூட்டங்களில் பேசியிருக்கிறார்கள்.

தங்களது போராட்டங்கள், அமைப்பின் முகவரி, சர்வதேச அங்கீகாரம் இவற்றைக் காட்டினாலே ஐ.நா-வின் அரங்கத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அந்தவகையில்தான், ‘கைலாசா’ தேசத்துக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. அதை ஒரு நாடாக ஐ.நா அங்கீகரிக்கவில்லை. ஓர் அமைப்பாகத்தான் அங்கீகரித்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து தான் விரட்டப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகள் எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை, தனக்கு ஆதரவாகப் பேசவில்லை என்கிற கோபம் நித்தியானந்தாவுக்கு உண்டு. இதனால்தான், ‘பா.ஜ.க அரசில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று சர்வதேச அமைப்புகளிடம் புகார்களைத் தட்டிவிடுகிறார் நித்தி. வாரணாசியில் காசி கைலாசநாதர் ஆலயத்தைத் திறந்து வைத்தும், கேதர்நாத்தில் ஆதி சங்கரரரின் சிலையை நிறுவியும், இந்து மதத்தின் ஒற்றை அடையாளமாக சர்வதேச அளவில் தன்னை முன்நிறுத்துகிறார் பிரதமர் மோடி. அவருக்குப் போட்டியாக, ஐ.நா-வில் புகாரளித்து தன்னை இந்து மதத்தின் ஒற்றைப் பிரதிநிதியாக நிலைநிறுத்திக்கொள்ளப் பார்க்கிறார் நித்தி. வரும் ஜனவரி 3-ம் தேதி, தன்னுடைய பிறந்தநாளையொட்டி கனடாவின் டொரன்டோ நகர் மேயர் ஜான் டோரியிடமிருந்தும், அமெரிக்காவின் ஃபுல்லர்டோன் நகர் மேயர் ஃப்ரெட் ஜுங்கிடமிருந்தும் வாழ்த்து பெற்று, தனக்கு சர்வதேச அங்கீகாரம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார். ஐ.நா-வில் மோக்‌ஷப்ரியானந்தா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மார்ச் 2022-ல் நடைபெறும் ‘மனித உரிமைக் கவுன்சில்’ கூட்டத்தில் விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழும் பட்சத்தில், பல்வேறு கேள்வி களுக்கு இந்திய அரசு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி உருவாகும்” என்றனர்.

இந்தியாவிலிருந்து தான் விரட்டப்பட்டதற்கும், அதற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும், ‘ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகள் எந்தவிதமான உதவியும் செய்யவில்லை’ என்கிற கோபத்திலிருக்கும் நித்தியானந்தா, “இந்துச் சமூக வாக்குகளை வைத்துதானே இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள். இவர்களின் முகத்திரையை இந்துக்களிடம் கிழிக்கிறேன்” என்று தன் சகாக்களிடம் சவால்விட்டிருக்கிறாராம். அதன் ஒரு பகுதிதான், ஐ.நா சிறுபான்மையினர் கவுன்சில் கூட்ட விவகாரம் என்கிறது விவரமறிந்த வட்டாரம். இன்னும் என்னென்ன கூத்துகளெல்லாம் அரங்கேறக் காத்திருக்கிறதோ?

 
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad