குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை! ஆசிரமத்தில் அரங்கேறிய கொடூரம்

சென்னை புழல் அடுத்த புத்தகரம் பகுதியில் இயங்கி வரும் சீரடிபுரம் சர்வ சக்தி பீடம் என்ற ஆசிரமத்தை சங்கரநாராயணன் மற்றும் அவரது மனைவி புஷ்பா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு கொளத்தூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாய்க்கு உடல்நல குறைவு காரணமாக இந்த ஆசிரமத்தில் விபூதி வாங்க வந்துள்ளார். அப்போது அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் 2018ஆம் ஆண்டு இளம்பெண்ணிற்கு திருமணம் நடந்து அவரது கணவர் வெளிநாட்டிற்கு சென்றதை அறிந்த ஆசிரம நிர்வாகி இளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை கணவரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அண்மையில் கருவுற்று பிரசவித்த பாதிக்கப்பட்ட பெண் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இளம்பெண்ணை சிறுவயதில் இருந்தே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரம நிர்வாகி சங்கரநாராயணன் அவருக்கு துணையாக இருந்த மனைவி புஷ்பா ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.