புலம்பெயர்தல் தொடர்பில் கனடா பிரதமர் அறிவித்துள்ள அருமையான திட்டங்கள்: மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி

புலம்பெயர்தல் தொடர்பில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கும் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புக்கும் சில முக்கிய கட்டளைகள் பிறப்பித்துள்ளார்.

கனடாவைப் பொருத்தவரை, அதன் பிரதமர்தான், தனது அமைச்சர்கள் என்னென்ன நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்த, அவர்கள் அவற்றை நிறைவேற்றவேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

அதே வகையில், கனடாவின் புதிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraserக்கும் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புக்கும், அவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது குறித்து தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

The mandate letter என்னும் அந்த கடிதம், கனேடிய புலம்பெயர்தல் அமைப்பை வழிநடத்தும் மிக முக்கியமான கொள்கை ஆவணமாகும்.

அந்த கடிதத்தில், பிரதமர் என்னென்ன விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.

விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலகட்டம்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலகட்டத்தைக் குறைக்குமாறு புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraserஐ அறிவுறுத்தியுள்ளார். இதில், கொரோனா காரணமாக ஏற்பட்ட காலதாமதமும் அடங்கும்.

எக்ஸ்பிரஸ் நுழைவு

எக்ஸ்பிரஸ் நுழைவு வாயிலாக சர்வதேச மாணவர்களும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களும் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை அதிகப்படுத்துதல்

குடும்பங்கள் மறு இணைப்பு

குடும்பங்கள் மீண்டும் இணைவதற்கான விண்ணப்பங்கள் செய்வதில் மின்னணு முறையை அறிமுகம் செய்தல் மற்றும் தங்கள் நிரந்தர வாழிட உரிமங்கள் பரிசீலிக்கப்படும் வரை, துணைவிக்கும் (அல்லது துணைவருக்கும்), பிள்ளைகளுக்கும் தற்காலிக வாழிடம் வழங்குவது தொடர்பாக ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். (Family reunification: Introduce electronic applications for family reunification and implementing a program to provide temporary residence to spouses and children abroad while they await the processing of their permanent residence applications)

முனிசிபல் நாமினி திட்டம் ஒன்றை உருவாக்குதல்

முனிசிபல் நாமினி திட்டத்தை உருவாக்குவதன் நோக்கம், கனடா முழுவதிலும், பரந்த ஒரு புலம்பெயர்தலை உருவாக்குவதற்காக ஆகும். அத்துடன், சிறு மற்றும் நடுத்தர சமூகத்தினரின் புலம்பெயர்தலுக்கு சிறந்த ஆதரவு அளிப்பதை Fraser உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

கனேடிய குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நீக்குதல்

கனேடிய குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நீக்கவும் கனேடிய பிரதமர் ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.

நம்பிக்கைக்குரிய பணி வழங்குபவர் திட்டத்தை நிறுவுதல்

பணியாளர் துறை அமைச்சருடன் இணைந்து, வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் கனேடிய நிறுவனங்களுக்காக, நம்பிக்கைக்குரிய பணி வழங்குபவர் திட்டம் ஒன்றை நிறுவுமாறு புலம்பெயர்தல் துறை அமைச்சர் Fraser கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். அத்துடன், பணி உரிம புதுப்பித்தல் முறையை எளிமையாக்குதல் முதலான நடவடிக்கைகளை எடுத்து, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தின் Global Talent Stream பிரிவை மேம்படுத்துமாறும் Fraser கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஆவணங்களற்ற பணியாளர்கள்

ஏற்கனவே இருக்கும் pilot திட்டங்களின் அடிப்படையில், கனடாவிலிருக்கும் ஆவணங்களற்ற பணியாளர்களுக்கான நிலையை ஒழுங்குபடுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க Fraser கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதுபோக, கியூபெக்கிலுள்ள பிரெஞ்சு மொழி பேசும் புலம்பெயர்ந்தோருக்கு உதவுதல், மற்றும் 40,000 ஆப்கன் அகதிகள் மறுகுடியமர உதவுதல் ஆகிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தப்பட பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இப்போது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது குறித்து பிரதமர் அறிவுறுத்திவிட்டார். இனி அவற்றை வரும் மாதங்களில் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு நடைமுறைப்படுத்தும் முயற்சிகளைத் துவக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad