கொழும்பு – பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டானது வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
குறித்த கைக்குண்டானது மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனவும், இந்தக் கைக்குண்டு 13 வயது சிறுவன் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரே இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுமார் 16 வருட காலமாக, குறித்த தேவாலயத்திற்கு வருகின்ற நபர் என்பதுடன், கடந்த 9 மாதங்களாக குறித்த தேவாலயத்திலேயே நிரந்தரமாக அவர் தங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கைக்குண்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சில பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொரள்ளை காவல்துறையினர் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்தி வருகின்றனர்.