சுவிஸ் தடுப்புக்காவலில் மூன்று இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் கொள்கைக்கு முடிவு கட்டவேண்டும் என்றும், நீதி வழங்கவேண்டும் என்றும் கூறி சுவிட்சர்லாந்தில் பேரணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
பேசலில் அமைந்திருக்கும் Bässlergut நாடுகடத்தல் சிறை ஒன்றின் முன் பதாகைகளுடன் கூடிய போராட்டக்காரர்கள் பலர், சுவிட்சர்லாந்து தமிழர்களை நாடுகடத்துதற்கெதிராக கோஷம் எழுப்பினார்கள்.
சுவிஸ் அரசு இலங்கை அரசுடன் கைகோர்த்து இந்த அநியாய செயலில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
சுவிஸ் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் துவங்கியுள்ளன.
2018ஆம் ஆண்டு 28 வயது தமிழ்ப் பெண் ஒருவர் சிறையில் உயிர்ழந்தது தொடர்பான வழக்கில், தொடர்புடைய சுவிஸ் பாதுகாவலர்கள் சிலர், சென்ற ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அந்த காவலர்கள் மருத்துவ உதவியளிக்க தாமதித்ததால் அந்தப் பெண் உயிரிழந்தார். உடலில் ஆடை ஏதும் இல்லாமல், முகம் குப்புற, அவர் தரையில் கிடந்ததைக் குறித்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, Nesurasa Rasanayagam என்பவர் சுவிட்சர்லாந்திலுள்ள Gampelen என்ர இடத்தில் அமைந்திருந்த முகாமில் உயிரிழந்தார். இரண்டு வாரங்களுக்குப் பின் அவர் உயிரிழந்ததாக மட்டும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால், அவர் எதனால் இறந்தார் என்பது அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடலையாவது கொடுங்கள் என அவரது குடும்பத்தினர் கெஞ்சியும், அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக அவரது உடல் சுவிட்சர்லாந்திலேயே தகனம் செய்யப்பட்டது.
வேலை செய்யும் உரிமை மறுப்பு
சென்ற மாதம், மற்றொரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான Naguleswaran Vijayan தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணங்கள், சுவிட்சர்லாந்தின் புகலிட மற்றும் புலம்பெயர்தல் கொள்கையின் குரூரத்தை வெளிப்படுத்துவதாக பேரணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Naguleswaran Vijayan |
உதாரணமாக, வேலை செய்து வீட்டுக்கு பணம் அனுப்பும் நம்பிக்கையில் சுவிட்சர்லாந்துக்கு வந்த, திருமணமானவரும் மூன்று பிள்ளைகளை உடையவருமான Nesurasa, 7 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் செலவழித்தும், அவருக்கு வேலை செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
நாளொன்றிற்கு எட்டு சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டும் அவருக்கு அவசர உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி, சுவிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர்கள் இந்த மூன்று பேர் மட்டுமல்ல என்கிறார்கள் பேரணிகளில் இறங்கியுள்ளவர்கள்.
பெடரல் அமைப்பின் காரணமாக அதைக் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறும் அவர்கள், ஆனாலும், ஒவ்வொரு வழக்காக கையில் எடுத்து, ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க போராடுவோம் என்கிறார்கள்.