களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் நெடுஞ்சாலையில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இந்த மாணவர் கடத்தப்பட்டதாகவும், சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு பின்னர் வீதியில் விடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய மாணவர் செயற்பாட்டாளர்கள் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.