தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்றைய தினம் (27.11) சூறாவளியாக மாறக்கூடிய அளவுக்கு விரிவடைந்து கிழக்கு கரையை அண்மித்ததாக பயணிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள சில பகுதிகள் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில், அலைகள் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரை மேலெழக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் கடல் அலைகள் சீற்றமாகக் காணப்படும்.
எனவே, மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.