யாழில் பெண்ணைக் கொன்று முற்றத்தில் புதைத்த கணவன். காட்டிக் கொடுத்த மனைவி!!

யாழ்ப்பாணம் பகுதியில், வீட்டின் உரிமையாளரை கொன்று அவரை முற்றத்தில் புதைத்த கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஜெரோம் எனும் குடும்பஸ்தர் அவருடைய மனைவியுடன் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அவ்வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் அடிக்கடி முரண்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முரண்பாடுகள் அதிகரிக்கவே ஜெரோம் அந்த வீட்டின் உரிமையாளரை கொலை செய்து வீட்டின் முற்றத்தில் புதைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2009 ஆம் ஆண்டின் இறுதியில் குறித்த வீட்டின் உரிமையாளர் மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்ததாக ஜெரோம் அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதுபற்றி உறவினர்களால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. காணாமற் போன வீட்டின் உரிமையாளரை மூன்று மாதங்களாகியும் காணக்கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜெரோமுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்படவே மனைவி அவரை விட்டுப் பிரிந்து காணாமல் போயிருந்த உரிமையாளரின் உறவினர் வீட்டின் அருகில் குடியமர்ந்துள்ளார்.

மூன்று மாதங்கள் கழித்து காணாமற்போன வீட்டின் உரிமையாளரை தனது கணவன் ஜெரோமே கொலை செய்ததாகவும், அவரது சடலம் குறித்த வீட்டின் முற்றத்திலேயே புதைக்கப்பட்டு இருப்பதாகவும் உரிமையாளரின் உறவினர்களுக்கு ஜெரோமின் மனைவி தெரிவித்திருந்தார்.

தகவல் அறிந்த உறவினர்கள் இதுபற்றி உடனடியாக யாழ்.பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றதுடன் யாழ் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி போன்றவர்களும் அவ்விடத்துக்கு வருகை தந்தனர்.

ஜெரோமின் மனைவி சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதை அடுத்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து ஜெரோம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டார்.

குறித்த நபருக்கு கடந்த வருடம் யாழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில் வழக்கு விசாரணை நேற்று யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இறந்து போன வீட்டின் உரிமையாளரின் உறவினர்களின் சாட்சிகள், வழக்கை விசாரித்த அப்போதைய யாழ் குற்ற த்தடுப்புப் பிரிவின் உப பரிசோதகர் போன்றவர்களின் சாட்சிகள் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபராகிய ஜெரோமின் மனைவி மரணமடைந்துள்ள நிலையில் ஏனைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் மன்றினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் குறித்த வழக்கை ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.