2017 - 2019 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்... மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு?...

SHARE:

மேஷம் ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்ப...

மேஷம்
ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும்.

என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். வாகனச் செலவுகள் அதிகரிக்கும். சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். ஷேர் லாபம் தரும். என்றாலும் முன்பின் தெரியாதவர்களை நம்பி உங்களின் ஆதார் எண்ணைத் தர வேண்டாம்.

11.12.2018 முதல் 13.2.2019 வரை குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகுபகவான் பயணிப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கு சாதகமாகும். பிதுர்வழிச் சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் பரிச்சயம் செய்து வைப்பவர்களையே வேலையில் சேர்த்துக்கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமையால் மன இறுக்கம் உண்டாகும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள்மீது திரும்பும். அவர்களிடம் உஷாராக இருங்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்துக் கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராவது வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு நல்லது செய்துவந்த கேது பகவான் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற ஒரு படபடப்பு இருக்கும்.

உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துசெல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசால் ஆதாயம் கிடைக்கும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். வெளிநாடு, வெளிமாநிலத்தில் மகனுக்கு வேலை கிடைக்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் பிள்ளைகளால் அலைச்சல்கள் இருக்கும். அவர்களை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள்.

இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையைத் தந்தாலும், இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரியவைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத் தீபமேற்றி வணங்குங்கள். மாமரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம் 
எப்போதும் லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்களே! 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் இணைந்து என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், அம்மாவுடன் வீண் வாக்குவாதங்களையும் உடல்நலக் குறைவையும் கொடுத்து வந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வி, வேலைக்காக வெளிநாடு அனுப்பிவைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் வெகுநாட்களாக மனதுக்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீடு நிஜமாகும் வாய்ப்பு அமையும். அதற்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு வட்டம் இனி விரியும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை உங்களின் தன பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.

11.12.2018 முதல் 13.2.2019 முடிய உங்களின் அஷ்டம லாபாதிபதியான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் மூத்த சகோதர வகையில் கருத்து மோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்கள் தங்களது தவறை உணருவார்கள். கல்வித் தகுதியில் சிறந்த அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது, இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பநிலை மாறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தந்தைவழிச் சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றித் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சல் குறையும். சகோதரர் சாதகமாக இருப்பார். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். மனைவி பக்கபலமாக இருப்பார். அவருக்கு வேலை கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். என்றாலும் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதுப் பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்து நீங்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக இருப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

ராகு, கேது பெயர்ச்சி கஷ்டநஷ்டங்களிலிருந்து உங்களைக் கரையேற்றுவதுடன் வசதியையும் நிம்மதியையும் அதிகரிக்க வைக்கும்.

பரிகாரம்: பிரதோஷ நாட்களில் இளநீர் தந்து சிவபெருமனையும், நந்தீஸ்வரரையும் வணங்குங்கள். மாதுளை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! 27.07.2017 முதல் 13.02.2019 வரை ராகுவும் கேதுவும் அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைப்பட்டுப் பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும்.


குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்கப்படாது. உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். பாசம் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். உங்களிடம் கடன் வாங்கிக் கொடுக்காமல் இருந்தவர்கள், பணத்தைத் திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகு பகவான் செல்வதால் அழகு, இளமை கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்தபந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களை கட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்திருந்த பணம் கைக்கு வரும். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழியில் சொத்து சேரும்.

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகு பகவான் பயணிப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவியாலும் மனைவிவழி உறவினராலும் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். புதுச் சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த முயல்வீர்கள். ஆனால், புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும் பணப் பற்றாக்குறையையும் தந்த கேது, இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முன்கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டுக்குச் செல்ல நேரிடுவதால், குடும்பத்தில் சிறிய கருத்து மோதல்கள் வரும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டக் கடன் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். இளைய சகோதரர்கள் மதிப்பார்கள். வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி பொதுநலப் போக்கிலிருந்த உங்களைத் தன்னலத்துக்கு மாற்றுவதுடன் சேமிக்க வைக்கவும் செய்வார்.

பரிகாரம்: ஏகாதசி நாட்களில் துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்குங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கடகம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்பவர்களே! உங்களுக்கு இராகுவும், கேதுவும் 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் என்ன தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு காரியத்தடைகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுதடுமாறிக் கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்து பேசினாலும் அதற்குத் தக்கபதிலடி தருவீர்கள்.

குடும்பத்தில் சின்ன சின்ன ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இருந்தாலும் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பணவரவு அதிகரிக்கும். என்றாலும் செலவினங்கள் அதற்குத் தகுந்தாற் போல் இருக்கும். ராகு ராசிக்குள்ளேயே நுழைவதால் ஆராய்கத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இரவுநேரத்தில் வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் கோவில் திருவிழாவில் முதல் மரியாதைக் கிடைக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். இளைய சகோதரங்கள் உதவுவார்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழி உறவினர்களை அனுசரித்துப் போவது நல்லது. கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கப்பாருங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வரும்.

குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழி சொத்துகளை பெறுவதில் இருந்த சிக்கல்கள் விலகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். நியாயத்தை எடுத்துச் சொல்லப் போய் உங்கள் பெயர் கெட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களில் இடமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும். சிலர் அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவை கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காக சிலவற்றை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். 7&ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்&மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்க்கவும். சொத்துப் பிரச்சனை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் மழலை பாக்யம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். புது பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கு சாதகமாகும்.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சொந்த&பந்தங்களால் ஆதாயமடைவீர்கள்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் அமைதி நிலவும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வேற்றுமொழிக்காரர்களால் பயனடைவீர்கள். ஷேர் லாபம் தரும். அவசர முடிவுகள் வேண்டாமே. மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

இந்த இராகு கேது மாற்றம் உங்களை சில நேரங்களில் சிரமப்படுத்தினாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: பௌர்ணமி திதி நாட்களில் புற்றுடன் அருள்பாலிக்கும் அம்மன் கோவிலில் மஞ்சள் தூள் தந்து வணங்குங்கள். வாழைமரக் கன்று நட்டு பராமரியுங்கள். ஆரோக்யம், அழகு கூடும்.

சிம்மம்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்களே! 27.7.2017 முதல் 13.2.2019 வரை உங்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி என்ன செய்யும் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே பிரச்சினைகளில் சிக்கவைத்ததுடன், தலை வலி, முதுகுவலி, கால் வலி எனப் புலம்பித் தவிக்கவைத்த ராகு பகவான், இப்போது ராசிக்குப் பனிரெண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். இனி எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலியவந்து பேசுவார்கள். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காதுகுத்து என நல்லதெல்லாம் நடந்துகொண்டேயிருக்கும். பார்த்து வெகுகாலமான தூரத்து உறவினர்கள்கூட, இனி படையெடுத்து உங்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த சிக்கல்கள் விலகும். தந்தையுடனிருந்த மனக்கசப்பு நீங்கும். தாயின் உடல்நிலை சீராகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியிடம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. மனைவிவழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகு பகவான் பயணிப்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை அதிகம் செலவு செய்து சீர்திருத்துவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். வீடு கட்ட வங்கியிலிருந்து கடன் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்கள் உங்களுடைய கருத்துகளை முதலில் மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே சண்டையையும் உடல்நலக்குறைவையும் அடுக்கடுக்காகத் தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் எனத் தொல்லை தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் கூடும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புது வேலைக்கு முயல்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், வி.ஐ.பி.களால் ஆதாயமடைவீர்கள். ரத்த சொந்தங்கள் தேடி வருவார்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களும் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் சேமிப்புகள் கரையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், ஆரோக்கியம், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படக்கூடும்.

இந்த ராகு-கேது மாற்றம் திடீர் யோகத்தையும் எதிர்பாராத வெற்றிகளையும் தருவதுடன், சமூகத்தில் முதல் மரியாதையையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்: அமாவாசை திதி நாட்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை நெய் தீபமேற்றி வணங்குங்கள். பலாமரக் கன்று நட்டுப் பராமரியுங்கள். நினைத்தது நிறைவேறும்.

கன்னி
காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் ராகு-கேது மாறுவதால் என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டில் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்காகப் பல பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்; உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். மகனின் அடிமனதில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். 11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் அதைச் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயல்வீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து மீள்வார். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்சினை ஒன்று தீரும்.

11.12.2018 முதல் 13.2.2019 முடிய குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். ஆனாலும் பணவரவுக்குக் குறைவிருக்காது. புதிதாக ஆடை, ஆபரணங்கள் சேரும்.

வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆனால், அவர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால், உள்மனதில் ஒருவிதத் தயக்கமும் தடுமாற்றமும் சந்தேகமும் வந்து நீங்கும்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பணம், நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். புதுப் பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் பழைய வீட்டை இடித்துக் கட்டுவதற்குச் சில புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அரசு காரியங்கள் சற்று தாமதமாகி முடியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்பதுடன் புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதாக அமையும்.

பரிகாரம்: சதுர்த்தி திதி நாட்களில் ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் தந்து வணங்குங்கள். பவழ மல்லி நட்டுப் பராமரியுங்கள். செல்வம் சேரும்.

COMMENTS

Name

amazing,7,article,12,Astrology,98,Cinema,1,downloads,2,Health,259,online,1,others,81,poems,4,relationship,21,software,7,Sri Lanka,44,srilanka,61,technology,1,tips,16,videos,22,World,342,
ltr
item
JaffnaBBC | Jaffna News: 2017 - 2019 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்... மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு?...
2017 - 2019 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்... மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு?...
https://2.bp.blogspot.com/-ThJ-yhSzOQo/Wb9qOx8v_DI/AAAAAAAAACw/C0Ysmw1rXVUTdlE8vVJCocT6YV_NOvamACLcBGAs/s640/download%2B%25282%2529.jpg
https://2.bp.blogspot.com/-ThJ-yhSzOQo/Wb9qOx8v_DI/AAAAAAAAACw/C0Ysmw1rXVUTdlE8vVJCocT6YV_NOvamACLcBGAs/s72-c/download%2B%25282%2529.jpg
JaffnaBBC | Jaffna News
https://www.jaffnabbc.com/2017/09/2017-2019.html
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/2017/09/2017-2019.html
true
1227258678055319245
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content