வறுமை நீங்க வேண்டுமா? ஒரே ஒருமுறை அங்கே சென்று வாருங்கள்…!

பக்தர்களின் வறுமையை நீக்கி வளமடையச் செய்யும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னு எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணேஸ்வரி கோவில் திகழ்கிறது.

தல வரலாறு :
காசியில் ஏற்பட்ட மிகப்பெரும் பஞ்சத்தால் மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் அவதியுற்றனர். அவர்களது பசிப்பிணியைத் தீர்க்க நினைத்த பார்வதிதேவி, காசியில் பெரிய மாளிகை ஒன்றை உருவாக்கி, அன்னபூரணி என்ற பெயரில் அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். காசி அரசாளுகைக்குட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் அங்கு வந்து சாப்பிட்டுப் பசியாறிச் சென்றனர்.

இதனையறிந்த காசி அரசன், உண்மை நிலையை அறிய அங்கு மாறுவேடத்தில் சென்று சாப்பிட்டான். அங்கிருந்த அன்னபூரணி அனைவருக்கும் அட்சயப் பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து வழங்கிக் கொண்டிருந்ததையும், அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியப்படைந்தான்.

அவனுக்கு அங்கு உணவளித்துக் கொண்டிருப்பது சாதாரண பெண்ணல்ல என்பதும், அவள் இறைவியான பார்வதி தேவி என்பதும் தெரிந்தது. உடனே அவன், அன்னபூரணியை வணங்கித் தன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் தீரும் வரை அங்கேயே தங்கியிருந்து மக்களைக் காக்க வேண்டினான்.

அதனைக் கேட்ட அன்னபூரணி, தன்னால் காசியில் தங்கியிருக்க முடியாது என்றும், தான் சில நாட்களில் தென்திசை நோக்கிச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதனைக் கேட்ட அரசன் வருத்தமடைந்தான். அவன் வருத்தத்தை அறிந்த அன்னபூரணி, தான் இங்கு சில காலம் தங்கியிருந்ததால் இந்நாட்டில் இருந்த பஞ்சம் அனைத்தும் நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதால் கவலையடைய வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த அரசன், “அன்னையே, தாங்கள் தென்னாடு சென்றாலும், நாங்கள் வழிபட இங்கு அன்னபூரணியாகக் கோவில் கொண்டருள வேண்டும்” என்று வேண்டினான். அன்னபூரணியும் அவன் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டாள். அதன் பிறகு, அன்னபூரணி தென்திசை நோக்கிச் சென்றாள்.

காசியிலிருந்து தென்னாட்டிற்குத் தங்கப்படகில் வந்த அன்னபூரணியுடன் சாமூண்டீஸ்வரி (களரிவதிக்கல் தேவி), திருவற்காடு பகவதி (மடை கவைல் தேவி) எனும் இரண்டு தேவியர்களும் வந்தனர். கடல் பயணத்தில் ஆழி தீரம் (தற்போது ஆயிரம் தெங்கு என அழைக்கப்படுகிறது) எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த கிருஷ்ணர் கோவில் ஒன்று அவரது கண்ணில் பட்டது.

அந்தக் கிருஷ்ணர் கோவிலின் அருகிலேயேத் தானுமிருக்க விரும்பிய அன்னபூரணி, படகோட்டியைத் திரும்பச் செல்லும்படி சொல்லிவிட்டு அங்கு தனக்குத் தனியாக ஒரு கோவில் அமைத்துக் கொண்டாள் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

தென்னாட்டுக்குக் கடல் வழியாக வந்த அன்னபூரணி, கோலதிரி மரபு அரசர்கள் ஆட்சி செய்து வந்த நாட்டின் செல்வவளங்களைக் கேள்விப்பட்டு அங்கு வந்த போது, அங்கிருந்த இயற்கை அழகில் மயங்கி, அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலை அடுத்துக் கோவில் கொண்டார் என்று செவிவழிக் கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

இக்கோவில் 1500 ஆண்டுகளாகக் கிருஷ்ணர் கோவிலாக இருந்தது என்றும், அப்போது ஆட்சியிலிருந்த மன்னரான அவிட்டம் திருநாள் ராசராசா என்பவர் அக்கோவிலின் அருகில் அன்னபூரணேஸ்வரிக்குச் சிலை நிறுவித் தனிக் கோவில் அமைத்தார் என்றும் சொல்கின்றனர்.

ஆலய அமைப்பு :
இங்குள்ள கோவில் வளாகத்தில் தென்புறம் கிருஷ்ணர் கோவிலும், வடபுறம் அன்னபூரணேஸ்வரி கோவிலும் அமைந்துள்ளன. இரண்டு கோவில்களின் கருவறைகளும் ஒரே பாறையில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு ஒரே அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு கோவில்களிலும் அன்னபூரணேஸ்வரி கோவிலே மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் அன்னபூரணேஸ்வரி அன்னப் பாத்திரம் மற்றும் அன்னக் கரண்டியுடன் காட்சியளிக்கிறார்.

வழிபாடு :
அதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காக ஆலயம் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் நான்கு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ வழிபாடு முடிந்தவுடன் இரண்டு கிண்ணங்களில் நெய்யமிர்து எனப்படும் நைவேத்தியம் இறைவி முன்பாகப் படைக்கப்படுகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள ஆண்டு தொடக்க நாளிலிருந்து ஏழு நாட்கள் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவில் ஆறு நாட்கள் யானையின் மேல் எடுத்துச் செல்லப்படும் அன்னபூரணேஸ்வரி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுகிறார். இப்படிச் செய்வதால் அனைத்துத் திசையிலுமிருக்கும் மக்களும் வறுமையின்றி வளமடைவர் என்கின்றனர்.

1994-ம் ஆண்டு முதல், மலையாள நாட்காட்டியில் கும்பம் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் இக்கோவில் நிறுவப்பட்ட நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை தவிர, சிவராத்திரி, நவமி, ஏகாதசி போன்ற நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆலயச் சிறப்புகள் :
இக்கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கோவில் நடை அடைக்கப்படும் முன்பாக, சாப்பிடாதவர்கள் யாரும் இருக்கின்றனரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டே நடை அடைக்கப்படுகிறது. இக் கோவிலுக்குத் தாமதமாக வருபவர்களும் பசியால் வாடாமலிருக்க, இங்கிருக்கும் ஆலமரம் ஒன்றில் கோவில் பிரசாதம் உணவுப் பொட்டலமாகக் கட்டித் தொங்கவிடப்படுகிறது.

இங்கு அன்னதானத்திற்கு எடுக்கப்படும் அரிசியின் அளவிற்கேற்பக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்கின்றனர். ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அவர்களது வறுமை அனைத்தும் நீங்கி வளமடைவர் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பெயர்க் காரணம் :
அன்னபூரணேஸ்வரி கோவில் அமைந்திருக்குமிடம் ‘செருகுன்னு’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஊரிலிருக்கும் சிறு குன்று ஒன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால், சிறு குன்று என்று அழைக்கப் பெற்றுப் பின்னர் அது ‘செருகுன்னு’ என்று மாறிப் போய்விட்டது என்று சிலரும், தொடக்கத்தில் இந்தக் குன்று சோற்றுமலையாக இருந்தது என்றும், சோற்றுக்குன்று என்று அழைக்கப்பட்டதே செருகுன்னு என்று மருவி விட்டது என்று சிலரும் சொல்கின்றனர்.

அமைவிடம் :
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், தாலிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செருகுன்னு எனுமிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகுன்றின் மேல் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad