பெண் பொலிஸ் தூக்கிட்டு தற்கொலை !

பெண் பொலிசார் ஒருவர் ஜன்னல் அருகே முழங்கால் போட்டபடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கஞ்சம்பமடியை சேர்ந்தவர் மகாலட்சுமி (25). இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பொலிசாராக பணியாற்றி வந்தார்.

இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்து வந்துள்ளார். மகாலட்சுமிக்கும், அவருடன் பணியாற்றி வரும் திருநெல்வேலியை சேர்ந்த காவலர் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது காதலர் நீண்ட நேரம் முயற்சித்தும், மகாலட்சுமி அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் மகாலட்சுமி தங்கியிருந்த உப்பிலிபாளையம் குடியிருப்பிற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது காவலர் குடியிருப்பின் ஜன்னலில் கயிற்றை கட்டி, முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து மகாலட்சுமியின் உடல் கைப்பற்றப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மகாலட்சுமியின் உறவினர்கள் கூறுகையில், அவர் தற்கொலை செய்து கொள்ள கூடியவர் கிடையாது. மிகவும் தைரியமான பெண். அவருடன் பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த காவலர் ஒருவருடன் ஏற்பட்ட காதலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் ஆண் காவலரின் பெற்றோர் இருவரது திருமணத்துக்கும் சம்மதிக்காததால் திருமண பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. எனவே மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஜன்னல் கம்பியில் கயிறு மாட்டி தரையில் அமர்ந்து இருந்தவாறு மகாலட்சுமி பிணமாக கிடந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் பொலிஸ் ஒருவர் பூட்டிய அறையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.