கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது. மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை. அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்.
இல்லாத ஒன்று இயங்க இயலாது. இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும். உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்துகொள்ள முடியாது. அனுபவிக்கவும் முடியாது. எனவே அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார். அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்.
இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை. அப்படி சர்வசக்தி வாய்ந்த கடவுள் உருவம் இல்லாமலும் இருக்கலாம் . உருவத்தோடும் இருக்கலாம். அருவுருவாக இருக்கும் பரம்பொருளை தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து. அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது. உண்மையானது என்பது இதன் பொருளாகும். அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது. அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்.
அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைக்கு எப்படி அடையாளப்படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருசர்கள் இறைவனின் அருவுரு தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள். லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.
அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும். நிற்குணமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது. லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும். இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும்.
நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும். கடைசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்.