யாழில் ரவுடிகளை தனிநபராக எதிர்த்த குடும்பஸ்த்தர்!!

கிளாலி பகுதியில் இன்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகளுடன் தனி ஆளாக போராடிய நிலையில் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிகள் தப்பி ஓடியிருக்கின்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை பளை பொலிஸார் தேடி வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு கிளாலிப் பகுதியில் வீடு ஒன்றிற்கு அண்மையில் 10 பேர் கொண்ட கும்பல் குழப்பம் விளைவித்துள்ளது.

இதனையடுத்து பளைப் பொலிஸார் அங்கு சென்று அங்கு கூடியிருந்தவர்களை அங்கிருந்து வீடுகளுக்குச் செல்லுமாறு அனுப்பிவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதன் தொடராக இன்று அதிகாலை 2 மணியளவில் கோடரிகள், வாள்கள் உட்பட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு ஒன்றுக்குள் நுழைந்த 10ற்கும் மேற்பட்ட ரவுடிகள் வீட்டின் கதவு, ஜன்னல் என்பவற்றை கொத்தி உடைத்து உள்ளே நுழைந்திருக்கின்றனர்.

இதன்போது அந்த வீட்டில் இருந்த குடும்பஸ்தர் உடனடியாக தனது பிள்ளைகளையும் மனைவியையும் அறை ஒன்றுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த கைக் கத்தியுடன் உள் நுழைந்த ரவுடிகளை எதிர்த்துப் போராடியதுடன், சமையலறையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து ரவுடிகள் மீது வீசியுள்ளார். இதனால் தாக்குதல் நடாத்தவந்த ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான வீட்டுப் பெண் பொலிஸாருக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸாரும் உடனடியாகவே சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஏழு பேரை தமக்குத் தெரியும் என்று குடும்பஸ்தர் பொலிஸாருக்கு தெரிவித்த நிலையில் அவர்களின் வீடுகளுக்கு பொலிஸார் உடனடியாகவே சென்று விசாரித்தபோது குறித்த நபர்கள் வீடுகளில் இல்லை. இந்நிலையில் அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தெரியவந்துள்ளது.