வாகன இறக்குமதி மற்றும் அரச சேவைக்கு புதிதாக ஊழியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகள் 2022 இல் மேற்கொள்ளப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அடுத்த வருடமும் புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் 9.12.2021 நடைபெற்ற பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சில அரச நிறுவனங்களில் ஆளணிகள் அதிகமாக காணப்படுவதாகவும், சில பிரதேச செயலகங்களில் ஆளணிகள் அதிகமாக உள்ளதாகவும், சிலவற்றில் உட்காருவதற்கு நாற்காலி கூட இல்லை என்றும் தெரிவித்தார். மீன்பிடித்துறை மற்றும் கால்நடைகள் மூலம் தேவையான அளவு புரதச்சத்து மக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்வதை நிறுத்த முடிந்தால் அது பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த வருடத்தின் முதல் சில மாதங்களில் வெளிநாட்டு நாணயத்தில் சிரமங்கள் இருந்தாலும், பஞ்சம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார். நாடு பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், கடன் மற்றும் வட்டி போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு பெருமளவிலான டொலர்களை செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறை மூலம் பெறப்பட்ட பணம் இல்லாமல் போனதாகவும், புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் பணமும் இந்த வருடம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பது முக்கியம் என்று தெரிவித்தார்.