ஆம்புலன்ஸ் உடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி.

நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A-9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மல்லாவியிலிருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தனது செய்கை நிலத்தை பார்வையிட்டு, வீதியின் மறுபுறத்துக்கு மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது, நோயாளியுடன் வேகமாக பயணித்த நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது.

நோயாளர் காவு வண்டியின் சமிக்கைகளை அவதானிக்காது, சடுதியாக வீதியை கடக்க முற்பட்டுள்ளமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோயாளர் காவு வண்டியில் பயணித்த நோயாளர் மற்றும் வைத்தியர் ஆகியோர் இன்னுமொரு நோயாளர் காவு வண்டியில் மாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர சேவை ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பார ஊர்திகள் சங்க முகாமையாளராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad