உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா பகுதியில், திருமண வற்புறுத்தல் மற்றும் மிரட்டலால் தூண்டப்பட்ட ஆத்திரத்தில், ஒரு வேன் டிரைவரால் 35 வயது கொண்ட பெண்னுக்கு நேர்ந்த கொடூரம் இந்தியாவை உலுக்கியுள்ளது.
பிரீத்தி என்பவருக்கு 35 வயது. இவரது திருமணம் நொய்டாவின் அதே பகுதியைச் சேர்ந்த கைலாஷ் என்பவருடன் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரீத்தி, தனது இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு தனியாக வீடு அமர்த்தி, அப்பகுதியிலேயே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோனு என்பவர் (32) என்பவருடன் பிரீத்திக்கு பழக்கம் ஏற்பட்டது. மோனு ஒரு வேன் டிரைவராக வேலை செய்பவர். இவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தகவல்களின்படி, இந்தப் பழக்கம் படிப்படியாக திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரீத்தி தனது காதலனான மோனுவை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். மோனு இதை ஏற்க மறுத்ததும், பிரீத்தி "நீ என்னுடன் தொடர்பில் இருப்பதை உன் மனைவி மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்துவிடுவேன்" என மிரட்டினார்.
இதற்கு பதிலாக மோனு, "இவ்வாறு செய்தால் உன் மகள்களைப் பற்றி தவறான வதந்திகளை ஊரில் பரப்பிவிடுவேன்" என எதிர்மிரட்டல் விடுத்தார். இந்தத் தகராறு தொடர்ந்து வந்த நிலையில், பிரீத்தியின் திருமண வற்புறுத்தல் தாங்கமுடியாமல் தவித்தார் மோனு, ஒருகட்டத்தில் பிரீத்தியை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை, மோனு தனது வேனில் பிரீத்தியை "வெளியே செல்லலாம்" என அழைத்துச் சென்றார். அவர்கள் ஒரு கடையில் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா வாங்கியபடி, ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் வேனை நிறுத்தினர். அங்கு இருவரும் உணவு உண்டனர். ஆனால், உணவுக்குப் பிறகு பிரீத்தி மீண்டும் திருமணத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த மோனு தனது வேனில் மறைத்து வைத்திருந்த கோடரியை எடுத்து பிரீத்தியை சரமாரிய வெட்டினார். இதில் பிரீத்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து, பிரீத்தியின் உடலை தலை, கைகள் என தனித்தனியாக வெட்டினார் மோனு. தலை மற்றும் கைகளை ஒரு பெரிய பாலித்தீன் கவர் மற்றும் ஆணுறைகளுக்குள் அடைத்து, உடல் மற்றொரு பாலித்தீன் கவரில் வைத்துஅருகிலுள்ள கால்வாயில் வீசி ஓடினார். இன்று அதிகாலை, அப்பகுதியில் வந்த மக்கள் பாலித்தீன் கவர்களில் இருந்து சிந்திய ரத்தமும், மனித உடல் பாகங்களும் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழு, உடல் பாகங்களை கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பியது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ், மோனுவின் வேனை அடையாளம் கண்டு அவரை கைது செய்தது. மோனு தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடைபெறுகிறது. இச்சம்பவம் நொய்டா பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "இது போன்ற கொடூரச் சம்பவங்கள் நம் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது" என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
போலீஸ் அதிகாரிகள், "சம்பந்தப்பட்டவர் முழு ஒப்புதலுடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். மேலும் சாட்சிகளை விசாரிக்கிறோம்" என தெரிவித்தனர். இந்த வழக்கு, தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் மோதல்கள் எவ்வாறு கொடூரமான முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை எச்சரிக்கையாக்குகிறது. போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
