திருமணத்திற்கு தயாரான பெண்: வீடு புகுந்து குத்திக்கொலை; நடந்த வெறிச்செயல்

கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சோமு (வயது 52). டெய்லர். இவருடைய மனைவி சாரதா. இவர்களது மகள் தன்யா(23). இவர் பி.எஸ்.சி (ஐ.டி) படித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சகீர் (30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சோமுவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து, அன்னூர் ரோட்டில் உள்ள தனது சித்தப்பா பேக்கரியில் வேலை செய்து வந்தார்.

அப்போது தன்யா பள்ளியில் படித்து வந்தார். அப்போது தன்யாவிடம், சகீர் அடிக்கடி பேசுவது வழக்கம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதால், சோமுவின் குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

பேசுவதை நிறுத்தினார்

இந்த பேச்சும், பழக்கமும், சகீரின் மனதில் ஒருதலைக் காதலாக உருவெடுத்தது. இந்த காதல் எண்ணங்களை அறிந்து கொள்ளாமல், தன்யாவும் அவருடன் பேசுவது உண்டு. ஆனால் இந்த பேச்சும், பழக்கமும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்று, தன்யாவின் பெற்றோர், மகளிடம் அறிவுரை கூறினர்.

இதனால் தன்யாவும், பெற்றோர் சொல்லை கேட்டு, சகீரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்.

சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள், தன்யாவை வழிமறித்து தனது காதலை சொல்லி உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, தயவு செய்து என்னை மறந்து விடு. உன்னை பற்றிய எண்ணம் என்னிடம் துளிகூட இல்லை. நீ நினைத்தாலும், எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் நீ வேறு மதம், நாங்கள் வேறு மதம் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

மீண்டும், மீண்டும் தொந்தரவு

தன்யாவின் பேச்சில் நிலை குலைந்துபோன சகீர், வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்வேன் என்று வைராக்கியத்துடன் மீண்டும், மீண்டும் தன்யாவை தொந்தரவு செய்துள்ளார். இது பற்றி அறிந்த தன்யாவின் பெற்றோர் சகீரை கண்டித்து உள்ளனர்.

இருந்த போதிலும் தன்யாவின் பெற்றோர், இந்த பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அவளுக்கு, நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் முடித்து விட வேண்டியது தான் என்று நினைத்தனர். அதன்படி அன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தவரை தன்யாவுக்கு திருமணம் பேசி முடித்து நிச்சயம் செய்தனர்.

திருமணம் அடுத்த மாதம் நடப்பதற்கு தேதி குறித்து, திருமணத்துக்கு தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தன்யாவின் பெற்றோர், தன்யாவை வீட்டில் இருக்க சொல்லி விட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் தன்யாவை தனியாக விட்டு விட்டு செல்வதால், அப்போது சகீர் வந்து பிரச்சினை செய்து விடுவானோ? என்று பயந்து வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு சென்று விட்ட னர். ஆனால் சகீர் இந்த விஷயத்தை எப்படியோ? தெரிந்து கொண்டார். வீட்டின் முன் புறத்தில் பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து, பின்புறமாக சென்று கதவை தட்டி உள்ளார்.

குத்திக்கொலை

இந்த நிலையில் தனது பெற்றோர் தான் வந்து கதவை தட்டுகிறார்கள் என்று அறிந்து, கதவை திறந்து உள்ளார். அப்போது சகீர் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்யாவை மாறிமாறி குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில், தன்யா கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து சகீர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்த தன்யாவின் பெற்றோர், மகள் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்து கண்ணீர் விட்டு கதறினர்.

இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சகீரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒருதலை காதலால் படு கொலை செய்யப்பட்ட சென்னை சுவாதி, கரூர் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, வரிசையில் தன்யாவின் பெயரும் சேர்ந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad