ஆட்டிற்கு குழை பறிக்கச் சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலி!

யாழ் - ஏழாலை தெற்குப் பகுதியில் குடும்பப் பெண்மணி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் வழமை போல நேற்று முன்தினம் (03) மாலை 03.30 மணியளவில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்கு சென்ற போதே இவ்வாறு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் வீட்டு வளவுக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு அரசமரக் குழைகளை முறிக்க முற்பட்ட போதே கால்தடுக்கிப் பின்பக்கமாகக் கிணற்றில் விழுந்துள்ளார்.

அத்துடன், குழை வெட்டி வருவதாகச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் கழித்தும் அவரைக் காணாத காரணத்தால் இந்த பெண்மணியின் வயோதிபத் தாயாரும், சகோதரியும் இணைந்து வீட்டு வளவினுள்ளும், அயலிலும் தேடியுள்ளனர்.

குறித்த பெண்மணியின் சகோதரி தற்செயலாக வீட்டு வளவில் அமைந்திருந்த கிணற்றை எட்டிப் பார்த்த போது சகோதரி இறந்த நிலையில் கிணற்று நீரில் மிதந்துள்ளதுடன், சடலம் மீட்கப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பெண் 49 வயதையுடைய இரு பிள்ளைகளின் தாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகக் கிராம சேவகர் ஊடாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டதுடன், அன்று இரவு 10.30 மணியளவில் மல்லாகம் நீதிமன்றப் பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.

மேலும், பதில் நீதவானின் உத்தரவுக்கமைய உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பெண்ணின் சடலம் நேற்று(04) பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.