அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

ரயிலின் கூரை மேல் பயணம் செய்த அகதி: உடல் கருகி பலியான பரிதாபம்

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதி ஒருவர் ரயிலின் கூரை மீது பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு இடையே அதிவேக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சுவிஸ் நாட்டில் புகலிடம் பெறுவதற்காக சில அகதிகள் சட்டவிரோதமாக ரயில்களின் கூரை மீது அடிக்கடி பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்தாலியில் இருந்து கடந்த திங்கள் கிழமை மாலை ஒரு மின்சார ரயில் புறப்பட்டுள்ளது.

சுமார் 7 மணியளவில் டிசினோ மாகாணத்தில் உள்ள Balerna நகருக்கு ரயில் வந்தபோது கூரை மீதிருந்து திடீரென தீப்பிழம்புகள் கிளம்பியுள்ளன.

இதனைக் கண்ட ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், ரயிலின் கூரை மீது பரிசோதனை செய்தபோது அங்கு வாலிபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக உடலை கீழே இறக்கிய அதிகாரிகள் அதனை பரிசோதனை செய்தபோது உயிரிழந்தவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், சுவிஸில் புகலிடம் பெறுவதற்காக இவ்வாறு ரயில் மீது பயணம் செய்துள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.