கவலையாக இருக்கின்ற மனைவியை ஆறுதல்படுத்த 7 வழிகள்!!!

உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படும் செயல்களின் தாக்கம் நாள்பட மறைந்து போகும்.

ஆனால், மன ரீதியாக உண்டான தாக்கம் சாகும் வரை ஆறாத வடுவாக இருக்கும்.

முக்கியமாக செய்யாத தவறுக்கு பொறுப்பாகி ஏசப்படும் போது பெண்கள் மனரீதியாக மிகவும் புண்பட்டு போவார்கள்.

இதற்கான சூழலையோ, நிலையையோ ஆண்கள் (கணவர்கள்) ஏற்படுத்திவிடக் கூடாது.

தவறே செய்தாலும் சுட்டிக்காட்டி திட்டக் கூடாது, தட்டிக் கொடுத்து தான் திருத்தவேண்டும்.

ஒருவேளை நேரடியாக உங்களாலோ அல்லது மற்ற உறவுகளாலோ துணை மனம் புண்பட்டு போனால், அவர் மீண்டும் எப்படி இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அந்த சூழலில் ஒரு சிறந்த துணையாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் காணலாம்...

கைக்கெட்டும் தூரத்தில்...
எக்காரணம் கொண்டும் அவர்கள் மனம் புண்பட்டு போன தருணத்தில் வெளியூர் பயணங்கள் மேற்கொண்டுவிட வேண்டாம். நீங்கள் அருகே இல்லாதிருப்பது அவர்கள் மேலும் மன வருத்தம் கொள்ள செய்யலாம். அல்லது அதையே எண்ணி, எண்ணி மென்மேலும் மன வருத்தம் அடைய வைக்கலாம்.

ஆரத்தழுவுதல்...
முடிந்த வரை மனைவியுடன் அதிக நேரம் செலவழிக்க தவற வேண்டாம். அவரை நெஞ்சோடு தழுவி அரவணைத்துக் கொள்ளுங்கள். மனைவியின் புண்பட்ட மனதை ஆற்ற இதவிட பெரிய மருந்து ஒன்று இருந்து விட முடியாது. நெஞ்சின் அந்த சூடு அவரது சோகத்தை கரைந்து போக செய்துவிடும்.

மெதுவாக...
 ஒருவரது மனம் புண்படும் படி நடந்துக் கொள்வது எளிது. ஆனால், அதில் இருந்து அவரை மீண்டும் வெளிக் கொண்டுவருதல் கடினம். ஆண்கள் சில சமயங்களில் கோவத்தில் திட்டி விடுவார்கள். பிறகு மன்னிப்பு கேட்டுவிட்டு, "ஏன் மூஞ்சிய இன்னும் அப்படியே வெச்சுருக்க.. சிரி சிரி..." என கேட்பார்கள். இதை முதலில் நிறுத்த வேண்டும். ஓர் நொடியில் உண்டாகும் தீக்காயம் ஆறுவதற்கு ஒருசில நாட்கள் ஆகும். ஆறாத வடுக்கள் ஏற்படுத்தும் சொல் காயம் உடனே ஆற வேண்டும் என கருதுவது தவறு.

சந்தேகமற்ற...
முக்கியமாக தவிர்க்க வேண்டிய விஷயம் இது. ஏற்கனவே மனம் புண்பட்டிருக்கும் அவரிடம் சந்தேக பார்வையோ, சந்தேக பேச்சையோ வெளிப்படுத்தக் கூடாது. இது, எரியும் நெருப்பில், எண்ணெய்யை ஊற்றுவதற்கு சமம். இதனால், இல்லற உறவில் விரிசல் தான் அதிகரிக்கும்.

தயக்கம் வேண்டாம்...
 சில சமயம் ஆண்கள் திட்டிவிட்டு, தவறு நம் மீது என உடனே அறிந்துவிடுவார்கள். ஆனால், உடனே சென்று மன்னிப்பு கேட்க மாட்டார்கள். கொஞ்சம் ஈகோ எட்டிப்பார்க்கும். சரி, முதலில் அவள் தலை திருப்பட்டும் பிறகு பார்த்துக் கொள்வோம் என இருப்பார்கள். ஒருவேளை மனைவி மனம் புண்பட்டிருப்பதற்கு காரணம் நீங்கள் எனில், அதை நீங்கள் உடனே அறிந்துவிட்டால். தயக்கம் காட்டாமல், உடனே சென்று மன்னிப்பு கேளுங்கள். இதுவொரு சிறந்த கைவைத்தியம் ஆகும். நல்ல பலனை அளிக்கும்.

அதே சொற்கள்...
மனைவி எதன் காரணத்தால் மனம் புண்பட்டு இருக்கிறாரோ, அந்த சொல், விஷயம், சூழல் மீண்டும் உண்டாக செய்திட வேண்டாம். இது வருத்தம் மென்மேலும் அதிகரிக்க காரணமாகிவிடும். முடிந்த வரை அந்த சூழல், அந்த நிகழ்ச்சி கொஞ்ச நாட்களுக்கு உங்கள் வீட்டில் நடக்காமல் இருந்தால் சிறப்பு. ஏனெனில், அது மீண்டும், மீண்டும் மறக்க நினைக்கும் விஷயத்தை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்க செய்யும்.

முழுமையான காதல்...
முழுமையான காதலை வெளிப்படுத்துங்கள், முழுமையான காதலை அவரை உணர செய்யுங்கள். அவர் விரும்பும், உங்களிடம் அதிகம் விரும்பும் செயல்களை வெட்கப்படாமல் செய்யுங்கள். இது அவரது மனதை திசை திருப்பும். இதனால், அவர் மனம் வேகமாக இயல்பு நிலைக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன.