‘நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பதால் இவ்வளவு கேடு உள்ளதா..? எச்சரிக்கை தகவல்!!

மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது… ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

ஸ்வீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை ‘நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்பதுதான். நான்ஸ்டிக் பாத்திரங்களில், ‘பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) எனப்படும் ஒரு வகை ரசாயனக் கலவை இருக்கிறது. சமைக்கும்போது உணவில் கலக்கும் இந்த ரசாயனம், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இது கணையத்தின் செயல்பாட்டைப் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறது, இந்த ஆராய்ச்சி முடிவு.

இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த ‘மோனிக்கா லின்ட்’ இது குறித்துக் கூறுகையில், ‘நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகுளோரினேட்டட் பைபீனைல்ஸ், டயாக்சின்ஸ், பிஸ்பினால் ஏ போன்றவை, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதேபோல, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய ‘பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’கள் நம் உடலில் உள்ளதா என்பதை ஆராய்ந்தோம். ஏனெனில், நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த ரசாயனம் உள்ளது. இது உணவில் கலந்து நம்முடைய உடலில் சென்று சேர்கிறதா என்பதை கண்டறிவதன்மூலம் இந்த பொருட்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

ஆய்வில் பெரும்பாலானவர்களுக்கு, பர்ஃப்ளூரினேட்டட் அமிலம் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தோம். இது கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இன்சுலின் சுரப்பைப் பாதிக்கிறது. இந்த ரசாயனம் கணையத்தை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோய் வருவதற்கு, நான்ஸ்டிக் பாத்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சர்க்கரை நோய்க்கு மூலகாரணங்கள் மூன்று. அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி மற்றும் மரபணு. இதைத் தவிர இதர காரணங்கள் பல உண்டு. அதில் இந்த பர்ஃப்ளூரினேடட் ரசாயனக் கலவை முதன்மையான காரணமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

நச்சுத் தன்மையுடைய இந்த ரசாயனக் கலவை, கணையத்தை நேரடியாகப் பாதித்து, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் வெளியேறுகிறது. இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தத்தில் சேர்வதனால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே மக்கள் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோயைத் தவிர்த்துவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. ‘ஜங்க் ஃபுட்’ உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு அதிக நார்ச் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad