ஆழ் கடலுக்கு கப்பலை எடுத்து செல்லும் முயற்சி தோல்வி !

இரசாயனப் பொருட்களை எடுத்து வந்த நிலையில் தீயினால் சேதமடைந்த கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அதிகாரிகள் சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

சிங்கப்பூர்-கொடியைக் கொண்ட எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற இந்த கப்பல் நேற்று காலை கடலில் மூழ்கத் தொடங்கியது. அதிகாரிகள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்த ஒரு நாள் கழித்து, கொழும்பின் துறைமுகத்திலிருந்து தொலைவில் உள்ள ஆழமான கடலுக்குக் கப்பலை இழுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

கப்பல் நிறுவனத்தின் வலைத்தளத்தின் இன்றைய அறிக்கையின் படி, கப்பலின் பின்புற பகுதி சுமார் 21 மீட்டர் ஆழத்தில் கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. மேலும் கப்பலின் பின்பகுதி தொடர்ந்து மெதுவாக மூழ்கிக்கொண்டிருக்கிறது.

இலங்கை நேரப்படி காலை 7 மணியளவில் கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் “எண்ணெய் கசிவு பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்கள் அடங்கிய கப்பலின் பெரும்பாலான சரக்குகளை தீ அழித்ததாகக் கப்பலின் இயக்கும் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் மீதமுள்ள இரசாயனங்களும், கப்பலின் எரிபொருள் தொட்டிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான தொன் எண்ணெய்யும் , கப்பல் மூழ்கினால் கசியக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பேரழிவு கடல் வளத்தைப் பேரழிவிற்கு உட்படுத்தி இலங்கைத்தீவின் புகழ்பெற்ற கடற்கரைகளை மேலும் மாசுபடுத்தும். பேரழிவு ஏற்கனவே குப்பைகளைக் கடலில் பரவச் செய்துள்ளது. 

பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல தொன் பிளாஸ்டிக் துகள்கள் உட்பட - கரைக்கு வந்துள்ளன. இதனையடுத்து சுமார் 80 கிலோமீட்டர் கடற்கரையோரத்தில் மீன்பிடிக்க இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எண்ணெய் கசிவு அல்லது பிற மாசுபாட்டைச் சமாளிக்கக் கப்பலின் வல்லுநர்கள் இலங்கையின் கடற்படையுடன் ஒருங்கிணைந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான இந்தியாவின் உதவியுடன் கடற்படை மற்றும் கடலோர காவல்படை எண்ணெய் கசிவுக்குத் தயாராகி வருவதாக இலங்கை கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார். கடல் மாசுபாட்டைக் கையாள்வதற்கு மூன்று கப்பல்கள் உட்பட இந்தியாவும் மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.

தீ விபத்தில் சிக்கிய கப்பலிலிருந்து ஏதேனும் எண்ணெய் கசிவுகளை ஆய்வு செய்ய இலங்கை கடற்படை சுழியோடிகள் குழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை தண்ணீருக்குள் கலந்து கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை அழிக்கக்கூடும் என்பதால் பயங்கர சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அஜந்த பெரேரா கூறினார்.

2021, மே 20 ஆம் திகதி அன்று 25 தொன் நைட்ரிக் அமிலம், பிற இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட 1,486 கொள்கலன்களைக் கொண்டு வந்த இந்த கப்பல் கொழும்பிலிருந்து வடமேற்கே 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு துறைமுகத்திற்குள் நுழையக் காத்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த மே 15 அன்று இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றப்பட்ட பின்னரே கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக இலங்கை கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளதுTags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad