சப்புகஸ்கந்தை பகுதியில் சூட்கேஸிற்குள் அடைக்கப்பட்ட நிலையில், குப்பை மேட்டில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டார்.
மாளிகாவத்தையில் வசிக்கும் 45 வயதுடைய மொஹமட் சபீக் பாத்திமா என்ற 2 பிள்ளைகளின் தாயாரே கொல்லப்பட்டு, சூட்கேஸிற்குள் அடைக்கப்பட்டிருந்தார்.
சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பை மேட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து, பொலிசார் மேற்கொண்ட சோதனையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளால் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது.
மாளிகாவத்தை தேசிய வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் தனது மனைவி கடந்த 28ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் புளூமெண்டல் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பெண் அடகு வைத்த தங்க நகைகளில் சிலவற்றை மீட்பதற்காக முச்சக்கர வண்டியில் மற்றுமொரு பெண்ணுடன் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தங்க நகைகளை மீட்டு விட்டு வண்டியில் வீடு திரும்பும் போதே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த பெண்ணுடன் தங்க நகைகளை மீட்க சென்ற பெண்ணுக்கும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.
அவருடன் முச்சக்கர வண்டியில் சென்ற பெண், மட்டக்குளி, சுமித்புர பகுதியை சேர்ந்தவர். அவர் தற்போது வீட்டில் இல்லையென கூறப்படுகிறது.
பெண் எப்படி கொல்லப்பட்டார், கொலை எங்கு நடந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதும், அந்தப் பெண் யார் என்பதை அடையாளம் காண அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உதவியையும் சப்புகஸ்ந்த பொலிசார் கேட்டிருந்தனர்.
இதேவேளை, காணாமல் போன பெண்களை தேடி சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்திற்கு மேலும் மூன்று தரப்பினர் நேற்று காலை வந்துள்ளனர். காணாமல் போனவர்களில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் யுவதிகளும் அடங்குகிறார்கள்.
கொல்லப்பட்ட பெண் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்றும் சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சூதாட்ட விடுதிகளில் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
அவர் இறுதியாக வீட்டை விட்டு வெளியேறிய போது அணிந்திருந்த நகைகள், சடலத்தில் காணப்பட்டிருக்கவில்லை.