கிளிநொச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந் இளம்பெ யுவதியொருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், யுவதி உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
கரவெட்டித்திடல் பகுதியை சேர்ந்த யுவதியே கடத்தப்பட்டார்.
அவர் இளைஞன் ஒருவரை காதலித்திருந்ததாகவும், எனினும், பின்னாளில் இளைஞனின் நடத்தையில் அதிருப்தியடைந்து, அவரது தொடர்பை துண்டித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் யுவதிக்கு வீட்டார் திருமணம் பேசி, நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு யுவதி கடத்தப்பட்டார்.
டிப்பர் வாகனத்தில் வீட்டிற்கு வந்த இருவர் திடீரென புகுந்து, யுவதியை பலவந்தமாக கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, யுவதியின் குடும்பத்தினர், அயலவர்கள் அந்த டிப்பர் வாகனத்தை விரட்டிச் சென்றுள்ளனர்.
டிப்பர் வாகனத்தின் பின்னால், கடத்தலில் ஈடுபட்ட தரப்பை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். யுவதியின் உறவினர்கள் விரட்டி வரும் தகவலை தொலைபேசியில் டிப்பர் சாரதிக்கு தெரிவித்து விட்டு, அவரும் அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
அவர்களிடமிருந்து தப்பிக்க, டிப்பர் சரதி அதி வேகமாக செலுத்திச் சென்றுள்ளனர். இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த டிப்பர், புதுப்பாலம் பகுதியில் வாய்க்காலிற்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.
இதில், கூலிப்படையாக கடத்தலிற்கு வந்த 17 வயதான ஒருவன் உயிரிழந்தான்.
கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான டிலக்சன் என்ற இளைஞனே உயிரிழந்தான்.
கடத்தப்பட்ட 23 வயதுடைய யுவதி படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கூலிப்படையாக வந்த இன்னொருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதியை ஆள் வைத்து கடத்தியதாக கருதப்படும் ஒரு தலை காதலன், சம்பவத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
வட்டக்கச்சி பகுதியில் பல மாதங்களின் முன்னர் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். யுவதியொருவருடன் ரௌடித்தனத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டவரே வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் பகுதியை சேர்ந்தவர்களே இந்த கடத்தலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.