இஸ்லாம் – கிறிஸ்தவம் – இந்து – அதிசய திருமணம்

சவூதி அரேபியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மணமகனுக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மணமகளுக்கும் குஜராத் மாநிலத்தில் வேதங்கள் முழங்க இந்து சம்பிரதாயப்படி நடைபெற்ற திருமணம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்த கிஷன் தோலியா என்பவர் உயர்கல்விக்காக சீனாவுக்கு சென்றிருந்தபோது அவருக்கு சவூதி அரேபியாவை சேர்ந்த ஹமித் அல் ஹமாத் என்பவர் அங்கு அறிமுகமானார். சொப்ட்வெயா் என்ஜினீயராக அங்கு பணியாற்றிவந்த ஹமித் அல் ஹமாத், ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலியானா ஸ்மிர்னாப் என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

சீனாவில் ஆடை அலங்கார நிபுணராக பணியாற்றும் ஜூலியானா, ஹமித் அல் ஹமாத்தை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், சீனாவில் படித்துவந்த கிஷன் தோலியாவுக்கு குஜராத்தில் உள்ள அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். தனது திருமண விழாவுக்கு வருமாறு ஹமித் அல் ஹமாத் மற்றும் ஜூலியானா ஸ்மிர்னாப்புக்கு கிஷன் தோலியா அழைப்பு விடுத்தார்.

அதன்படி அவர்கள் இருவரும் கிஷன் தோலியாவின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் குஜராத் மாநிலத்துக்கு வந்தனர்.

அங்கு சூரத் மாவட்டத்தில் நடைபெற்ற கிஷன் தோலியாவின் திருமணச் சடங்குகளை கண்ட அந்த வெளிநாட்டு காதலர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இத்தனை சடங்குகளா?, இவ்வளவு சம்பிரதாயங்களா? என வாயடைத்துப்போன அவர்கள், நாமும் இப்படிதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தனர்.

தனது திருமணத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சடங்கும், சம்பிரதாயமும் எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தவை?, எந்த அளவுக்கு இந்து மத கலாசாரத்தோடு நெருங்கிய தொடர்புடையவை?, அந்த சம்பிரதாயங்கள் நடைபெற்றபோது வேத விற்பன்னர்கள் ஓதிய மந்திரங்களின் பொருள் என்ன? என்பது குறித்து கிஷன் தோலியா ஆங்கிலத்தில் விளக்கிக்கூற, இப்படிதான் நாமும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்த காதலர்கள், இங்கேயே, அப்போதே, இதேமுறையில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தீர்மானித்தனர்.

தங்களது ஆசையை கிஷன் தோலியாவுக்கு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் மணமக்களுக்கு தேவையான புதிய ஆடைகள், நகைகள் எல்லாவற்றையும் வாங்கி, சூரத் நகரில் உள்ள வர்ச்சா பகுதியில் மண்டபம் பிடித்து, நேற்று முன்தினம் ஹமித் அல் ஹமாத்துக்கும், ஜூலியானா ஸ்மிர்னாப்புக்கும் வேதங்கள் முழங்க இந்து சம்பிரதாயப்படி திருமணம் நடைபெற்றது.

மணமகள் ஜூலியானா கழுத்தில் ஹமித் அல் ஹமாத் தாலி கட்டியபோது, கிஷன் தோலியா தம்பதியருடன் சேர்ந்து அவர்களின் உறவினர்களும் அட்சதைதூவி வாழ்த்தினர். பளபளக்கும் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டுப் புடவையில் புதுமண தம்பதியர் ஓமகுண்டத்தை சுற்றி வலம்வந்த காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.