பருத்தித்துறையில் இடம்பெற்ற பல கொண்டாட்ட நிகழ்வுகள். அதிரடியாக தனிமைப் படுத்தல்.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார நடைமுறையை கருத்திலெடுக்காமல், முறையான அனுமதி பெறாமல் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தியவர்கள், குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்வை நடத்தியவர்கள் ஆலய திருவிழாவை நடத்தியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் ரொனால்ட் தலைமையிலான அணியினர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கற்கோவளம், பருத்தித்துறை பகுதியில் இருவர் தமது 50வது பிறந்த நாள் நிகழ்வை ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பகல், இரவு வேளைகளில் மக்களை ஒன்று கூட்டி பொது சுகாதார நடைமுறைகளுக்கு முரணான விதத்தில் கொண்டாடியுள்ளனர்.

பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிற்கு விருந்தும் வழங்கப்பட்டது. இதில், பிரதேசத்தை சேர்ந்த பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், தும்பளை பகுதியில் குழந்தை பிறந்து 31வது நாள் தொட்டிலிடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்த முறைப்பாடுகள் பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் ரொனால்ட்டிற்கு பொதுமக்களால் வழங்கப்பட்டது. உடனடியாக அவரது தலைமையில் கிராம உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பொலிஸார் இணைந்து சம்பவ இடங்களிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில், அனைத்து முறைப்பாடுகளும் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குழந்தையின் 31ஆம் நாள் தொட்டிலிடும் நிகழ்வு நடந்த வீட்டிற்கு சென்று, சுகாதார தரப்பினர் விசாரணை நடத்திய போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதவிர, மாதனைப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தின் திருவிழாவிற்கு சுகாதார பகுதினர் கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர். எனினும், அதை மீறி, நேற்று ஆலயத்தில் பெருமளவானவர்கள் ஒன்றுகூடி பொங்கல் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து இன்று அங்கு சுகாதாரப் பிரிவினர் சென்ற போதும், ஆலயத்தில் பொங்கல் நடந்தது. பலர் கலந்து கொண்டிருந்தனர். சுகாதார பிரிவினர் வருவதை அவதானித்து தலைதெறிக்க தப்பியோடினர்.

சுகாதார விதிமுறையை மீறி ஆலய திருவிழாவை நடத்தியமைக்காக, சம்பவ இடத்தில் நின்ற கோயில் நிர்வாகத்திற்கு பொறுப்பான தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad