2 இலங்கை ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய தடை புது நடவடிக்கையால் பரபரப்பு !

கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தற்போது மேலும் 2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் ஏராளமான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இறுதிக்கட்ட போரின் போது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக ராணுவம் பல்வேறு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள் பலர் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துக்கு தொடர்புடைய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தற்போது மேலும் 2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா கூறும்போது, ‘மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும் பொறுப்பை மேம்படுத்தவும் அதிகாரங்களை பயன்படுத்துவது மூலம் அந்த உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.