தென் கொரிய நாட்டு மியூசிக் வீடியோக்களைப் பார்த்ததாக 7 பேரை சுட்டு கொன்றுள்ளது வட கொரிய அரசு.
தென் கொரிய நாட்டு வீடியோக்களைப் பார்த்த குற்றச்சாட்டில் 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது வட கொரிய அரசு.
கடந்த 3 வருடங்களில் இந்த 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தென் கொரியாவைச் சேர்ந்த டிரான்சிஸஷனல் ஜஸ்டிஸ் ஒர்க்கிங் குரூப் என்ற தொண்டு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இந்த 7 பேரையும் பொது இடத்தில் வைத்துக் கொன்றுள்ளனர். அப்படிக் கொல்லும்போது அந்த இடத்தில் கிம் ஜாங் உன்னும் இருந்தாராம். அவரது நேரடி மேற்பார்வையில்தான் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் வட கொரியாவிலிருந்து 683 பேர் தப்பி தென் கொரியாவுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் நடத்திய பேட்டியின்போதுதான் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. 27 மரண தண்டனைகள் குறித்த தகவல்களை இவர்கள் கொடுத்துள்ளனர். பலர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் போதைப் பொருள் பயன்படுத்தியது, விபச்சாரம், ஆள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே.
கடந்த மே மாதம் தென் கொரிய வீடியோ சிடிக்கள், யுஎஸ்பிக்கள் உள்ளிட்டவற்றை “சட்டவிரோதமாக” விற்பனை செய்ததாக ஒருவரை கைது செய்து பொது இடத்தில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். மற்ற 6 பேரும் ஹீசான் என்ற நகரில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் இதே குற்றச்சாட்டுதானாம்.
வட கொரியாவில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக நடந்து வருவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அதைப் பற்றி வட கொரியா ஒரு போதும் கவலைப்பட்டது கிடையாது, பொருட்படுத்துவதும் கிடையாது. அதேசமயம், சர்வதேச அளவில் இதுதொடர்பாக தற்போது வட கொரியாவுக்கு நெருக்கடி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டங்களை மீறினால் மரணம்தான் என்று மக்களை மிரட்டும் வகையில், அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வதை வட கொரியா அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டோரை அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்துத்தான் சுட்டுக் கொல்வார்கள். அப்போதுதான் மக்களிடம் பயம் இருக்கும் என்பது அவர்களது நினைப்பு.