விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் புதுப்புரளியை ஏற்படுத்திய டக்ளஸ்

பிரபாகரன் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்த பின்னர் தான் சரணடைந்தே இறந்தார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

நேற்றய தினம் சனிக்கிழமை பனை தென்னை கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தாணியை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரன் இறந்ததற்காக நான் வேதனையடைகிறேன். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்கு சயனட்டை கொடுத்து சாகடித்துவிட்டு, தான் சரணடைந்து இறந்துவிட்டார்.

பிரபாகரன் எத்தனையோ தடவை என்னை கொல்வதற்கு முயற்சித்தார். அவனால் அது முடியாது போனது. நான் அப்பவே வெளிப்படையாக சொன்னான் எங்களுடைய மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்னர் என்னை யாராலும் கொல்ல முடியாது என்று.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக 13வது திருத்தச்சட்டம் ஆரம்ப புள்ளியாக இருக்கும் என நான் அன்றிலிருந்தே கூறி வருகிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துங்கள் என இந்தியாவை கோருகிறது.

மாகாணசபையில் ஒன்றுமில்லை என்று அவர்கள் டக்ளஸ் தேவானந்தா மாகாணசபையை கைப்பற்றி விடுவார் தமிழ் மக்களுக்கு முடிந்தவரை அபிவிருத்திகளை ஏற்படுத்தி விடுவார் எ ன்பதற்காக உசுப்பேத்து அரசியல் மூலம் மாகாணசபையை தம் வசம் ஆக்கினார்.

நான் மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்குடனேயே செயல்பட்டு வருகிறேன் தவிர பொய்யான வாக்குறுதிகளை என்னால் வழங்க முடியாது.

ஆகவே நான் பிரபாகரனை பழிவாங்க முயற்சிக்கவில்லை.

எனது ஒரு கண்ணை பிரபாகரன் எடுத்துவிட்டார். இன்று இந்த மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவர் பிரபாகரன்.

என்னுடைய நெருக்கமான உறவுகளை காணாமல் ஆக்கியவர். ஆகையால் என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைவரின் நிலை தொடர்பில் எதுவுமே ஆதாதரங்களுடன் யாரும் உறுதிப்படுத்தாத நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்று இவ்வாறு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.