18 ஆண்டுகளுக்குப்பிறகு பழிக்குப்பழி…! அச்சத்தில் உறைய வைத்த கொலை

தந்தையை கொன்றதற்கு பழிக்குப்பழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஊராட்சி மன்றத் தலைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள மேல்மணல்மேடு கிராமத்தில் நடந்துள்ளது.

பூந்தமல்லி அருகே வெள்ளவேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட மேல்மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தி.மு.க உறுப்பினர். இதற்கு முன்பு புரட்சி பாரதம் கட்சியில் இருந்தார். இவர் மேல்மணல்மேடு ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வந்தார்.

சேம்பர் பிசினஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்தார். இந்த முறை இந்த ஊராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கராஜ், தன்னுடைய சகோதரியை நிறுத்த ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் தங்கராஜ், இன்று காலை நடைபயிற்சிக்காக வெள்ளவேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் வந்த மர்மக்கும்பல் சரமாரியாக தங்கராஜை வெட்டிச் சாய்த்தது. இதில் நிலைதடுமாறி ரத்தவெள்ளத்தில் அவர் சரிந்தார்.

தலை, முகம், கை என பல இடங்களில் வெட்டு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். குறிப்பாக தலையிலேயே குறி வைத்து கொலை கும்பல் வெட்டியுள்ளது. இதில் அவரது மூளை சிதறியுள்ளது. அவர் இறந்ததை உறுதி செய்தபிறகு கொலை கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவலறிந்ததும் வெள்ளவேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தங்கராஜ் உடலைக் கைப்பற்றினர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மேல்மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஒருவரின் உறவினர். 1998-ல் வெள்ளவேடு போலீஸ் நிலையம் முன்பே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொழில்போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக அப்போது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையில் கைதான தங்கராஜ், விடுதலை செய்யப்பட்டார். இதனால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக தங்கராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கூலிப்படை ஏவி அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

கொலை செய்யப்பட்ட தங்கராஜ், பல கோடிகளுக்கு அதிபதி என்று அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். மேல்மணல்மேடு பகுதியிலிருந்து சென்னைக்கு இடம்பெற திட்டமிட்ட நேரத்தில் தங்கராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
-விகடன்-

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..