யாழ்.கிராம பகுதிகளில் இரவில் சுற்றும் நபர்கள் : பெண்களுக்கு ஆபத்து

யாழ்குடாநாட்டில் தற்போது வாள்வெட்டுக்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்களுடன் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகங்கள் தொடர்பிலேயே அதிகரித்து வருவதாக ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகளில் பார்க்கக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகளவில் காணப்படும் பிரேதசமாக யாழ்ப்பாணம் உள்ளது என யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது மாணவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரித்துள்ளதாக கடந்த மாதம் வடக்கு மாகாண சபை கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் சிறு பெட்டி கடைகளில் இரகசிய சோதனைகள் நடத்த இரகசிய பொலிஸ் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஞ்சா பொதிகளை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு கிராமப்புறங்களில் சில இளைஞர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்தவகையில் இவ்வாறு இரவு நேரங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் இவர்கள் புகைபிடிப்பது மட்டுமன்றி சில அசம்பாவித செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக கிராமத்தில் உள்ள மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை விரைவில் கைது செய்யுமாறும், இவர்களால் பெண் பிள்ளைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்துக்கள் அதிகளவில் வரும் வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன், குறித்த சந்தேக நபர்களை கைது செய்து உரிய தண்டனைகளை வழங்கும் பட்சத்தில் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும் சுதந்திரமாக வீதியில் நடமாட முடியும் என்றும் பெண் பிள்ளைகளுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்பட ஒருபோதும் வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜனாதிபதி மற்றும் மதுவரித் திணைக்களங்கள் போன்ற அமைப்புக்கள் "யாழ்ப்பாணம் மதுவிற்கு அடிமையானது" என கூறும் கூற்று கைதட்டி சிரிப்பதற்கு இல்லை என்பதை யாழ் குடாநாட்டு மக்கள் மற்றும் இளைஞர்கள் கவனத்திற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு, சிறுவர்களும் பாடசாலை மாணவர்களும் அதிகளவில் போதை பொருட்கள் பாவனை செய்வதால் தங்களை பார்த்து மற்றவர்கள் பயப்படுகின்றார்கள் என எண்ணி செயற்படுவதானது, உண்மையில் மறுக்கத்தக்க விடையம்.

குறிப்பாக அவர்கள் பயப்படுவதில்லை, அவர்கள் உங்களை ஒரு வெற்றுப்பொருளாக பார்க்கின்றனர். இதனை இன்றைய இளைஞர் சமுதாயம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தற்போது பெரியவர்கள் மத்தியில் இளைஞர்களில் எதிர்கால நிலை தொடர்பில் தற்போது வரை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

குறித்த நிலையினை மாற்றியமைக்க புதிய தலைமுறையினரான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குறித்த போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க செயற்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் .

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad