சூதாட்டம் என்னும் போதையும் கொட்டும் பண மழையும்

அது ஊட்டி மலையின் ஒரு பகுதி. இருளில் காடுகளுக்குள் ஒரு சாகச பயணம். குழுவாகச் சென்றதில் சிறு தூரத்திற்கு மேல் நடக்க முடியாததால் மூவர் மட்டும் அடிவாரம் திரும்பினோம். மணி இரவு 12:30. கடும் குளிர். ஒரு நபர் அழுக்கு வேஷ்டி, சட்டை, ஒரு போர்வை ஒன்றை மேலே சுற்றிக்கொண்டு கையில் ஒரு மரப்பெட்டி, ஒரு தகர டப்பா சகிதம் அப்பொழுது தான் வந்தார். உடனே அங்கிருந்த நான்கு, ஐந்து நபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். நாங்களும் அங்கு என்ன நடக்கிறது காண விரைந்தோம். எந்த நம்பரில் பணம் வைத்தாலும் இரண்டு மடங்கு தருவதாக டப்பாவை உருட்டிக்கொண்டு இருந்தார். அந்த விளையாட்டுக்குப் பெயர் “லங்கர் கட்டை” என்று முடிந்து தான் தெரிந்தது. இரண்டு நபர்கள் ஆளுக்கு சில நூறுகளைக் கட்டி இரட்டிப்பாகப் பெற்று அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர். மூன்றாம் நபர் தொடர்ந்து தவறாகக் கூறி பணத்தை விட்டுக் கொண்டே இருந்தார். அப்பொழுது தான் எனக்குள் இருந்த ஞானி வெகுண்டெழுந்தார். என்னுடைய பர்ஸில் இருந்து பணம் வெளியே வந்ததும் மூன்றாம் நபர் விலகிவிட்டார். சாம்பிள்’க்கு ஒரு நான்கு முறை உருட்டினார். நான்கு முறையும் நான்கு என்று சொன்னால் அங்கு நான்கு. ஆறு என்றால் ஆறு. சரியென்று பணம் கட்டத் துவங்கினேன். ஒரு முறை கூட கரெக்ட்டான நம்பரை அனுமானிக்க முடியவில்லை. கொண்டு சென்ற ஐந்நூறும் காலி. என்னுடைய நண்பர் என்னைக் காப்பாற்ற களத்தில் குதித்தார். என்னுடைய தளபதி. அவருடைய பர்ஸும் சைபர். மற்றோறு நண்பர் வந்தார். இறுதியில் மூவர் கைகளிலும் காலி பர்ஸ் மட்டும் தான். சுற்றி இருந்த மூவரும் உருட்டும் ஆளுடன் வேறு இடம் நோக்கி நகர்ந்தனர். பின் தான் மரமண்டைக்கு தெரிந்தது. அவர்கள் நால்வரும் ஒரே அணியென்று. மூன்று பேரிடமும் தேநீர் அருந்தக் கூட பணம் இல்லாமல் மற்றவர்கள் வரும் வரை குரங்குகள் போல வண்டியின் முன் அமர்ந்துகொண்டு இருந்தோம்.

சூதாட்டம் என்பது மிகக் குறுகிய காலத்தில் நமது அனுமானத்தையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் நம்பி நம் பணத்தை முதலீடு செய்யும் ஒரு விஷயம். பாகுபாடு இல்லாமல் அனைத்து வகுப்பு, அனைத்து தரப்பு மக்களையும் சூதாட்டத்தின் கவர்ச்சி சில தினங்கள் வந்து செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒவ்வொரு மாநில சூழ்நிலை, கலாச்சாரம், பங்கேற்கும் சமூகம், வசதி வாய்ப்புகளைப் பொருத்து சூதாட்டக்களம் மாறுபடுகிறது.

நூற்றாண்டுகளாக தாயக்கரமும் பரமபதமும் இந்தியாவில் உள்ளன. மகாபாரத கதையே தாயக்கரத்தில் சூதாடுவதை மையமாக வைத்துத் தான் நகரும். பரமபதம் அச்சிடும் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு வரைந்து விளையாடி இருக்கலாம். பின்பு அச்சிடும் தொழில்நுட்பம் வந்தவுடன் தங்களுக்கு விருப்பமான கதைகளுடன் அச்சிட்டு விளையாடி மகிழ்ந்தனர். ஆடுபுலியாட்டம் இன்றளவிலும் சுமை தூக்குவோர் அல்லது வாகன ஸ்டான்ட் போன்று தினசரி காத்திருக்கும் இடத்தில் விளையாடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொருட்செலவோ, உபகரணமோ இல்லாமல் வெறும் பென்சில், ஒரு சில கற்கள், தேவையென்றால் வரையப்பட்ட அட்டை இருந்தால் போதும் என்பதால் இவ்வகை விளையாட்டுகளில் தீவிரம் அதிகரித்து அதுவே பந்தயமாக மாறி இருக்கலாம்.

செஸ் என்கிற சதுரங்கம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வருகிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிற்குள் நுழைந்து இங்கிருந்து தான் பிற நாடுகளுக்குச் சென்றுள்ளது. குப்தர்கள் காலத்தில் “சதுரங்கா” என்று அழைக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அல்லது பெரிதும் சூதாட்ட களத்தில் செஸ் இல்லையென்றாலும் உள்ளூர் பந்தயங்களில் பரிசுத்தொகைக்காக விளையாடப்படுகிறது.

கேரம்போர்டு விளையாட்டு தெற்காசிய மக்களிடையே மிகப் பிரபலம். இந்த விளையாட்டு இந்தியா மகாராஜாக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்றளவில் தமிழ்நாட்டின் வீதிக்கு வீதி கேரம்போர்டு சாம்பியன்களை நம்மால் பார்க்க முடியும். பெரும்பாலான சிறு மற்றும் பெரு நகரங்களில் சிறு அறைகள், கிளப்கள், என பல்வேறு தளத்தில் இதற்காக போர்டின் பிரத்யேக விளக்குகள் அமைக்கப்பட்டு தினசரி பந்தயங்கள் மறைமுகமாக நடக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை உண்மையான சூதாட்டம் என்று பரவலாக நம்பப்படுவதில் சீட்டு விளையாட்டு முதல் இடத்தைப் பிடிக்கிறது. பொது இடத்தில் விளையாடத் தடை செய்யப்பட்ட ஒன்று. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட க்ளப்கள், விடுதிகள் போன்ற ஒரு சிலவற்றில் மட்டுமே தொழில் முறை சூதாடிகளும், மற்றவர்களும் விளையாடுகின்றனர். புள்ளிகள் கணக்கில் ஒரு புள்ளிக்கு மிகக் குறைந்த பட்சம் ஒரு ரூபாய் முதல் ஒரு புள்ளிக்கு சில ஆயிரம் ரூபாய் வரை க்ளப்களில் ஆடப்படுகிறது. சாதாரண மக்களிடம் விடுமுறை தினம், பொது நிகழ்ச்சி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் ஒன்று கூடும்பொழுது பணம் வைத்து விளையாடுவதை ஒரு சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கொங்கு மாவட்டங்களில் சேவல் சண்டைகள் மிக பிரபல்யம். வெளிப்படையாகப் பந்தயங்கள் விடுவதை அரசு அனுமதிக்கா விட்டாலும் வளர்ப்பவர்கள் இடத்தில் இவை நடப்பதுண்டு. சாதரனமாக ஒரு கட்டு சேவல் என்கின்ற பந்தய சேவல் ரூபாய் 50௦0 முதல் 5௦,0௦0 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல விதமாக வகை சேவல்கள் மற்றும் அதன் தன்மையும் கேட்டால் மலைப்பாக இருக்கும். ஒரு சில ஆர்வலர்கள் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவின் மங்களூர் வரை சென்று சேவல்களை வாங்கி பயிற்சி அளித்து வருகின்றனர். போட்டிகளில் வென்றவருக்குத் தோற்ற சேவலும், பந்தய பணமும் அளிப்பது வழக்கம். இவ்வகை கட்டு சேவலின் இறைச்சி சுவையில் உலகின் மற்ற எந்த விலங்கின் இறைச்சியும் போட்டி போட முடியாது என்றே சொல்லலாம்.

புறா பந்தயம் ஒரு குறிப்பிட்ட சாரரிடம் மட்டுமே நடக்கிறது. இது தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே நடக்கும். குறிப்பிட்ட பந்தய தூரத்தை அடைவது, அல்லது அதிக நேரம் தரை இறங்காமல் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே இருப்பது என்று வெவ்வேறு வகையான போட்டிகள் நடக்கின்றன.

முதலில் வார லாட்டரி / மாத குலுக்கல் என்று இருந்த பொழுது அது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பரிசு இல்லையென்றால் அடுத்த குலுக்கல் தினத்திற்காகக் காத்திருந்தனர். காலப்போக்கில் பரிணாம மாற்றம் அடைந்து மூன்று நம்பர் / ஒரு நம்பர் குலுக்கல் போன்றவை உள் நுழைந்தன. ஒரு நாளைக்கு இரண்டு முறை குலுக்கல் / பல கம்பெனி லாட்டரிகளில் இது நடைபெறும். மக்கள் தங்கள் வேலை, பொருள், நிம்மதி அனைத்தையும் இழந்து தமிழகத்தின் தெருக்களில் லாட்டரி கடை வாசல் முன்பே காத்திருந்தனர். பின்பு முழுமையாக லாட்டரிகளுக்கு தடையைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இப்பொழுது கேரளா லாட்டரிகளை ஏஜென்ட்கள் மூலம் வாங்கி ஒரு கூட்டம் தங்கள் அதிர்ஷ்ட தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டங்களில் கணக்கிட முடியாத வகைகள் உண்டு. இதில் நாம் பந்தயம் கட்டிய பணத்தையும் வென்ற பணத்தையும் சரியாகத் தரும் இணையதளங்களைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

இணையதளத்தில் சீட்டு விளையாட்டு, குதிரை பந்தயம், ஸ்போர்ட்ஸ் பெட்டிங் எனப்படும் புட்பால், கிரிக்கெட் போன்ற அனைத்து முக்கியமான போட்டிகள் நடக்கும்போதும் பிரத்யேக இணையக் கவுண்டர்கள் ஓபன் செய்வார்கள். பரிவர்த்தனை அனைத்தும் இணையத்தில் நடைபெறும். பெரும்பாலான இணையதளங்கள் இவ்வகை பெட்டிங்’கில் சரிவர பணத்தை திருப்பித் தருவதில்லை. புகார் செய்யவும் முடியாமல் ஏமாறுபவர்கள் ஏராளம்.

பெங்களூர், கோவா போன்ற பெரு நகரங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களில் மட்டுமே வெளிநாட்டு விளையாட்டான ராயல் கேசினோ விளையாடப்படுகிறது. மேலும் இவ்வகை விளையாட்டுகள் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடும் மிக அதி செலவீனமான விடுதியாக இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை, சுய தொழிலில் ஏற்படுகின்ற சிரமங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றால் குறுகிய காலத்தில் அதிக பணத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான மக்கள் உழல்கின்றனர். சூதாட்டமும் அதற்கேற்றால் போல் புது வருகையாளர்களுக்கு சில நாட்கள் பணத்தை அள்ளித் தரும். அவர்களே வாடிக்கையாளர்களாக மாறிவிட்டால் கை குட்டையைக் கூட மிச்சம் விடாது. சூது என்பது ஒரு போதை. குறுகிய கால பணம் கொழிக்கும் வழி என்றாலும் அது ஒரு புதை குழி!!!!!!!!!!!!!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad