பக்கத்து வீட்டு ஆட்டை அறுத்து தீபாவளி கொண்டாடிய ஜேர்மன் குடும்பஸ்தருக்கு நடந்த கதி.

யாழ் தென்மராட்சிப் பகுதியில் கோவிலுக்கு நேர்ந்து விட்ட அயலவரின் வீட்டு கிடாய் ஆட்டை தோட்டத்துக்குள் பங்கு போட்டு ஆட்டுச் சொந்தக்காரனுக்கே ஒரு பங்கு இறைச்சியை விற்றுள்ளார் கில்லாடி குடும்பஸ்தர். குறித்த குடும்பஸ்தரின் நண்பன் கடந்த வாரம் ஜேர்மனியிலிருந்து தனது சொந்த ஊரான தென்மராட்சிப் பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு வந்துள்ளார். தனது நீண்டகால நண்பனை பார்வையிடுவதற்காக அவனது வீட்டு்க்குச் சென்றுள்ளார். அப்போது தீபாவளிக்கு கிடாய் அடித்து பார்ட்டி வைப்பது தொடர்பாக ஜேர்மனி நண்பன் ஆலோசனை செய்ததாக தெரியவருகின்றது. அதற்கு சம்மதித்த குறித்த குடும்பஸ்தர் கிடாய் ஒன்று தான் ஏற்கனவே பார்த்து வைத்துள்ளேன். ஆனால் காசு சரிப்பட்டு வரவில்லை என கூறியுள்ளார். உடனடியாக அதற்கான காசை கொடுத்து விட்டு ஜேர்மனி நண்பன் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று தீபாவளி.கிடாய் ஆடு வெட்டப்பட்டுள்ளது. தோட்டவெளிக்கு ஜேர்மன் நண்பனுடன் இரத்தவறையுடன் மதுவிருந்து நடந்துள்ளது. வெட்டப்பட்ட ஆட்டின் இறைச்சி பங்கு போடப்பட்டுள்ளது. இறைச்சிப் பங்கை குடும்பஸ்தரின் வீட்டுக்கு அயலில் உள்ள ஒருவரும் வாங்கிச் சென்றுள்ளார். அவர் குறித்த இறைச்சியை வாங்கிச் செல்லும் போது ஆட்டை இறைச்சிக்கு வெட்ட அழைத்த கூலியாள் அந்த ஆட்டின் தலை மற்றும் குடல்,தோலுடன் அங்கிருந்து வெளிளியேறிச் செல்லும் போது அயல் வீட்டு நபர் அந்த கூலிக்கு வந்த நபரிடம் ஆட்டின் குடல் மற்றும் தலை போன்றவற்றை விலைக்கு தருமாறு கேட்டுள்ளார். அத்துடன் அதனை துப்பரவு செய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது தான் கொண்டு வந்த பையினுள் இருந்து ஆட்டின் தலையை எடுத்து வெளியே வைத்து துப்பரவு செய்ய ஆயத்தமானார் கூலிக்கு வந்த நபர்.குறித்த ஆட்டின் தலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் அயல்வீட்டு நபர். தன்னால் வளர்க்கப்பட்டு கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாய் ஆட்டையே வெட்டியுள்ளார்கள் என பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


அங்கு பெரும் கலோபரம் உருவாகியது. பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் அவரது உறவுகள் சேர்ந்து தோட்டத்தை முற்றுகையிட்டுள்ளார்கள். ஜேர்மனியிலிருந்து வந்த நண்பன் மது போதையில் சண்டித்தனம் செய்ததால் அங்கு திரண்ட சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.இதனால் ஆவேசமடைந்த குறித்த ஜேர்மன் நண்பன் வடமராட்சிப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தனக்கு தெரிந்த பொலிஸ்காரனுக்கு தன்னை சிலர் மறித்து தாக்குவதாக தொலைபேசியில் அறிவித்துள்ளார். ஆனால் முழுமையான தகவல்களை குறித்த ஜேர்மனி நண்பர் பொலிஸ் நண்பனுக்கு தெரிவிக்கவில்லை.

குறித்த நண்பனும் தென்மராட்சிப் பகுதி பொலிசாருக்கு அறிவித்து ஒருமணித்தியாலத்துக்குள் அங்கு பொலிஸ் வந்துள்ளது. அங்கு வந்த பொலிஸாருக்கு நடந்த விடயங்கள் அனைத்து அங்கு நின்றவர்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நிறை வெறியில் நின்ற ஜேர்மன் நண்பன் அங்கு விசாரித்துக் கொண்டிருந்த சிங்களப் பொலிஸ் ஒருவரின் தோளில் கை போட்டபடி மச்சான் என் கூறி நட்பு பாராட்ட தொடங்கியுள்ளார்.உடனடியாக அங்கு நின்ற பொலிஸ் அதிகாரி குறித்த ஜேர்மன் நண்பனை பிடித்துச் சென்று முட்டுக்காலில் இருக்கவிட்டதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன் பின்னர் அயல்வீட்டுக்காரர் மற்றும் அவர்களின் உறவுகளிடம் குறித்த குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைகள் கெஞ்சி மன்றாடியதால் அங்கு சுமூகமான நிலை உருவாகியுள்ளது. ஆட்டுக்கான பணம் அயல்வீட்டாருக்கு கொடுக்க முற்பட்ட போது அந்தப் பணத்தை அப்பகுதியில் உள்ள பிரபலமான அம்மன் கோவிலுக்கு கொடுக்குமாறு அயல்வீட்டுக்காரர் கூறியதை அடுத்து பொலிசார் அங்கிருந்து சென்றதாக தெரியவருகின்றது.

குறித்த ஆடு கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு என்றதால் அது கட்டாக்காலியாகத் திரிந்துள்ளது. ஆட்டை வெட்டிய குடும்பஸ்தரின் தோட்டத்துக்குள் பல தடவைகள் குறித்த ஆடு அத்துமீறி நுழைந்து பயற்றங் கொடி போன்றவற்றை தின்று தீர்த்துள்ளது. இதனால் அந்த ஆட்டை பிடித்து ஒரு வாரமாக தனது தோட்டப்பகுதியில் கட்டிவைத்திருந்துள்ளார் குடும்பஸ்தர். யாரும் ஆட்டை தேடிவராத நிலையிலேயே அந்த ஆட்டை இறைச்சிக்கு வெட்டியதாக குறித்த குடும்பஸ்தர் அங்கு நின்றவர்களுக்கு விளக்கம் கொடுத்ததாக தெரியவருகின்றது.


ஜேர்மன் நண்பனின் மனைவி மற்றும் உறவுகள் அங்கு வந்து முட்டுக்காலில் இருந்தவரை மீட்டுள்ளார்கள். அத்துடன் ஜேர்மன் நண்பனின் மனைவி நிறை வெறியில் தள்ளாடியபடி நின்ற கணவனை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. ஆட்டு இறைச்சி சாப்பிட்ட போது அதனை தனது பேஸ்புக்கில் பதிவு செய்து சீன் காட்டிய ஜேர்மன் நண்பனின் பேஸ்புக் தற்போது அவராலேயே முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நடந்த சம்பவங்களை கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் நேற்று மாலை வந்த இரு பொலிசார் அவர்களை அழைத்து அந்த வீடியோக்களை அழிக்க வைத்ததாக தெரிவருகின்றது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad